கோடிகள் புரளும் இனிப்பு- கார வியாபாரம்: சேலம் மாவட்டத்தில் 200 முதல் 250 டன் வரை தயாராகின்றன

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 200 முதல் 250 டன் வரை இனிப்பு, கார வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
கோடிகள் புரளும் இனிப்பு- கார வியாபாரம்: சேலம் மாவட்டத்தில் 200 முதல் 250 டன் வரை தயாராகின்றன

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 200 முதல் 250 டன் வரை இனிப்பு, கார வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
 அதேநேரத்தில், சுமார் கோடிக்கணக்கில் பணம் புரளும் இனிப்பு, கார வியாபாரத்தில் பெரிய கடைகளின் வியாபாரத்துக்கு ஏதுவாக சிறிய கடைகளை மட்டுமே குறிவைத்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.
 தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் நகரில் மட்டும் குடிசைத் தொழிலாக வீடுகளில் வைத்து இனிப்பு, கார வகைகள் செய்தல், பேக்கரிகளில் சிறப்பு ஆர்டர்களை எடுத்துச் செய்வது, சமையல் கலைஞர்கள் தனியாக ஆர்டர் எடுத்து செய்வது, பெரிய கடைகள் என சுமார் 100 டன் இனிப்பு, கார வகைகள் செய்யப்படுகின்றன.
 மாவட்டம் முழுவதும் சுமார் 200 முதல் 250 டன் வரை இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தேச புள்ளிவிவரம் தெரிவிக்கின்றனர்.
 இதில் ஒரு கிலோ இனிப்பு சுமார் ரூ.250 முதல் ரூ.350 வரையும், கார வகைகள் ரூ.150 முதல் ரூ.180 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. இனிப்பு விற்பனை சுமார் ரூ.100 கோடி வரை செல்கிறது.
 அதேநேரத்தில் வீடுகளில் குடிசைத் தொழிலாக நடத்தப்படும் இனிப்பு, கார கடைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு ஆய்வு செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா கூறியது:
 தீபாவளி பண்டிகையையொட்டி குடிசைத் தொழிலாக இனிப்பு செய்யும் 75 இடங்கள், சுமார் 40 பேக்கரி கடைகள், பெரிய கடைகள் என நூற்றுக்கணக்கான இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம்.
 சுமார் 7 குழுக்களைக் கொண்டு 15 நாள்களாக ஆய்வு செய்து வருகிறோம். நகரில் உள்ள பெரிய கடைகள் தலா சுமார் 20 டன் முதல் 40 டன்னுக்கு மேல் இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்கின்றனர்.
 இனிப்பு, பலகாரங்களை தயாரிக்கும் மூலப்பொருள்கள் தொடங்கி, தயாரிப்பு தேதி, மிதமிஞ்சிய நிறமி சேர்ப்பு, விலங்கு சில்வர் இழை தடவிய இனிப்புகள் என பல கோணங்களில் ஆய்வு நடத்தி, மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வருகிறோம்.
 பொதுமக்கள் கிப்ட் பாக்ஸ்களை பெறும்போது தயாரிப்பு தேதி இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல, பால் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகள் 3 முதல் நாள்களுக்கு மட்டுமே இருப்பு வைத்து சாப்பிட முடியும். அதன்பிறகு கெட்டுவிடும். நெய் பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்களில் தயாரிக்கப்படும் இனிப்புகள் 7 முதல் 10 நாள்கள் வரையும், கார வகைகள் 10 முதல் 15 வரையும் கெடாமல் இருக்கும்.
 எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இனிப்புகளை வாங்கி சாப்பிட வேண்டும். அதேசமயத்தில் இனிப்பு, கார வகைகள் குறித்து புகார் செய்ய விரும்பும் பொதுமக்கள் 0427-2450332 என்ற எண்ணிலும், 9443520332 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 அதேநேரத்தில், ஆன்லைனிலும் மற்றும் பெரிய கடைகள் சார்பில் விற்கப்படும் இனிப்பு பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி இருப்பதில்லை என்றும், எப்படி வாங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்வது, சில்வர் இழை தடவிய இனிப்புகளே பெரிய கடைகளில் கிடைக்கிறது.
 மேலும், பல கோடிகள் புரளும் வியாபாரம் என்பதால், தரம் குறைந்த, உடல் நலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இனிப்பு, கார வகைகளை விற்பதை முறையாக ஆய்வு செய்து தடுத்திட வேண்டியது அரசின் கடமையாகும். பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com