வாழப்பாடி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: வீடுகள் சேதம், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதில் வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வாழப்பாடி பகுதியில் கடந்த இரு ஆண்டாக பருவமழை பொய்த்து போனதால், கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விவசாயம் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மழை வேண்டி, மக்கள் வினோத பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி, சிங்கிபுரம், விலாரிபாளையம், மன்னார்பாளையம் கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அதில் சோமம்பட்டி ஏரிக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்த 100 ஆண்டு பழைமையான அரசமரம், தொடக்கப்பள்ளி, பால் கூட்டுறவு சங்கம் பகுதியில் இருந்த வேம்பு, புங்கன் உள்பட 10 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 10 மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்ததால், மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
விவசாயி தர்மராஜ், கிருஷ்ணன், கோவிந்தம்மாள் ஆகியோரது வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. பாலசுப்பிரமணி, செல்லமுத்து, சண்முகம், குமார், ஜெயராமன் ஆகியோரின் வீட்டு கூரைகளும், எல்லம்மன் கோயில் கூரையும் சேதமடைந்தது. ராணி, மூர்த்தி ஆகியோரது கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை கொட்டகளும் சாய்ந்தன.
சூறைக்காற்றால் சேதம் ஏற்பட்ட நிலையிலும், இரு ஆண்டுகளுக்கு பிறகு, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் திடீரென பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சங்ககிரியில்... சங்ககிரியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
சங்ககிரி நகரில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சனிக்கிழமை மாலை குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணி வரை சங்ககிரி, சன்னியாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சங்ககிரி நகர் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பழைய பேருந்து நிலையம், புதிய எடப்பாடி சாலை பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர்த் தேங்கி நின்றது. மழை பெய்ததால் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைபட்டிருந்தது.
எடப்பாடியில்... எடப்பாடி பகுதியில் சனிக்கிழமை இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது.
எடப்பாடி, மொரசப்பட்டி, சித்தூர், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் கோடை உழவு செய்ய தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள செல்வநாயகி ஆலயத்தில் மகிமை திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஏசு உயிர்த்தெழும் நிகழ்சியில் கலந்துகொள்ள வந்திருந்த மக்கள் ஆலயத்தின் முன் உள்ள திறந்தவெளி
கலையரங்கில் கூடியிருந்தனர். திடீரென மழை பெய்ததால் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
ஏற்காட்டில்... ஏற்காட்டில் சனிக்கிழமை பிற்பகலில் கோடை மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வறட்சி காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் உள்ள மரங்கள், வனப்பகுதிகளில் உள்ள செடிகள் காய்ந்து கிடந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோடை மழை பெய்ததால் இலைகள் துளிர்க்க தொடங்கியுள்ளன. மலைப் பகுதிகள் முழுவதும் பசுமையாக காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஆடு, மாடு மற்றும் விலங்குகளுக்கு கோடை மழை பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com