ஆடித் திருவிழா வண்டிவேடிக்கை நிகழ்ச்சி

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
 சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட நகரில் உள்ள 8 அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 ஆடி விழாவின் சிறப்பம்சமாக குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் பல்வேறு குழுக்கள் சார்பில் தெய்வங்கள் போல வேடமிட்டு அலங்கார வண்டிகளில் ஊர்வலமாக வந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்.
 குகை ஆண்டிசெட்டி தெரு வண்டி வேடிக்கைக் குழு சார்பில் 112 -ஆவது ஆண்டாக முருக பெருமான், சூரபத்மனுடன் போரிட சக்தியிடம் வேல் பெற்று வரும் காட்சித் தத்ரூபமாக நடித்துக் காண்பிக்கப்பட்டது.
 மேலும், அம்பாலவாணசுவாமி கோயில் தெரு குழுவினர் சார்பில் பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு - மகாலட்சுமி, சிவன் - பராசக்தி என மும்மூர்த்திகளும் துணைவியாருடன் வரும் காட்சி பரவசப்படுத்துவதாக இருந்தது.
 புலிக்குத்தி தெரு குகை இளைஞர் குழு சார்பில் தசரத மன்னர், ஜனக மன்னர் நல்லாசியுடன் நடைபெற்ற ராமன் - சீதை திருமண நிகழ்ச்சி மற்றும் ஆட்டோ லோடு மேன் தொழிலாளர்கள் சார்பில் முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் வீரபாகு ஆகியோர் இருப்பது போலவும், ஜிக்கா பக்கா நண்பர்கள் குழு சார்பில் பூலோகத்தைக் காப்பாற்ற விஷ்ணு மச்சவதாரம் எடுப்பது போலவும், செங்கல்பட்டி வீரகுமாரர்கள் சார்பில் காமாட்சி, மீனாட்சி, காசி விசாலாட்சி மற்றும் ஆதிசங்கரர் போலவும் பக்தர்கள் வேடமிட்டு ஊர்வலமாக வந்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
 மேலும் வண்டி வேடிக்கை பரிசளிப்பு சங்கம் சார்பில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த வண்டிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com