ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் வா.சம்பத்

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது:
 சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
 களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவை அற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
 இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு துணை வட்டாட்சியர் நிலை அலுவலர்களை பணித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுடன் மேற்கண்ட பணிகளை கண்காணித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க மேட்டூர் சார் -ஆட்சியர் மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர்களை அறிவுறுத்தப்பட வேண்டும்.
 இதுபோலவே பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தும் கடந்த ஆண்டை போலவே நிகழாண்டும் குழு நியமனம் செய்து அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க வேண்டும். அனைத்துப் பணிகளையும் விடியோ பதிவு செய்ய வேண்டும்.
 சேலம் மாவட்டத்தில் அனைத்துக் கோட்டங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இடங்களில் துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர் ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் நிலை அலுவலர் ஒருவர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஒருவர் ஆகிய மூன்று அலுவலர்கள் கொண்ட குழுவினர் தணிக்கை பணி மேற்கொண்டு அப்பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரையக்கூடிய தன்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
 இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ரசாயன வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
 விநாயகர் சிலைகளை கரைக்கச் செல்பவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத் துறையினரால் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
 விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது ஏற்கெனவே கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்லவேண்டும். ஊர்வலத்தின் போது எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாவண்ணம் காவல் துறையினர் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், சார் -ஆட்சியர் (மேட்டூர்) மேகநாதரெட்டி, பயிற்சி ஆட்சியர் வைத்தியநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.விஜய்பாபு, காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட நீதியியல் மேலாளர் குமரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com