லாரி பட்டறைகளில் தேவையற்ற டயர்களை அகற்றாவிட்டால் உரிமம் ரத்து: சுகாதாரத் துறை துணை இயக்குநர்

தேவையற்ற டயர்களை அகற்றாவிட்டால் லாரி பட்டறைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் பூங்கொடி எச்சரித்துள்ளார்.

தேவையற்ற டயர்களை அகற்றாவிட்டால் லாரி பட்டறைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் பூங்கொடி எச்சரித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மழைக்காலம் தற்போது தொடங்கி உள்ளதால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள், இருசக்கர வாகனப் பழுது பார்க்கும் இடங்கள், லாரி பட்டறைகள், இதரப் பணிமனைகளில் தேவையற்ற டயர்களை வெளியில் போட்டு வைப்பதால் அதில் மழை நீர் தேங்கி டெங்கு நோயைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அருகில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் உயிருக்கு அபாயத்தை உண்டாக்கி வரும் சூழ்நிலை கண்டறியப்பட்டு உள்ளது.
 இதனால், மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் துறை, கல்வித் துறை மற்றும் நகராட்சிகள் நிர்வாகத் துறையுடன் இணைந்து கொசுப்புழு ஒழிப்புப் பணி மற்றும் காய்ச்சல் கண்காணிப்புப் பணி போன்ற தீவிர தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
 இந்த நிலையில் பட்டறை உரிமையாளர்கள் தேவையற்ற டயர்களை உடனடியாக மழையில் நனையா வகையில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருக்க ஓர் அறையில் இருப்பு வைக்க வேண்டும்.
 பஞ்சர் கடை, பட்டறை என்று பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரத்துக்காக வைக்கப்படும் டயர்களைத் துளையிட்டு தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை 4 நாள்களுக்குள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
 இதைத்தொடர்ந்தும் மேற்படி பட்டறைகளில் டயர்கள் வெளியில் கிடக்கும் பட்சத்தில் தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கருதி அவற்றை பொதுசுகாதார சட்டத்தின்படி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை ஒத்துழைப்புடன் கைப்பற்றவும், பட்டறைகளின் உரிமத்தை ரத்து செய்தும், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com