கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்களில் உடைப்பு: சேலம்,  நாமக்கல் மாவட்ட பகுதிகளில் 3 நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்ட கான்கிரீட் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதை

சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்ட கான்கிரீட் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்யும் வகையில் டிச.6 ஆம் தேதி முதல் டிச.8 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. 
இது குறித்து,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எடப்பாடி கோட்ட  நிர்வாகப் பொறியாளர் ஆ.அறவாழி தெரிவித்துள்ளதாவது:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால்  பராமரிக்கப்பட்டுவரும் ராசிபுரம்,  எடப்பாடி நகராட்சிகள்,   7 பேரூராட்சிகள் மற்றும் வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இயல்பு நீர் கொண்டு செல்லும் 600 மி.மீ.  விட்டமுள்ள இரும்பு வார்ப்பு குழாயில் நெடுங்குளம் காட்டூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகிலும்,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லும் 600 மி.மீ. விட்டமுள்ள முன்னுறுதி செய்யப்பட்ட கான்கிரீட் குழாயில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகிலும் என இரண்டு இடங்களில் நீர்க் கசிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது.
இதில் குடிநீர் வெளியேறுவதால்,  மேற்படி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் நீரேற்றுதல் உடனடியாக புதன்கிழமை காலை 7 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.  அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரிசெய்து குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  
இதனால்,  சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி,   மல்லுர் மற்றும் கொங்கணாபுரம் என மூன்று பேரூராட்சிகளுக்கும்,  கொங்கணாபுரம்,  எடப்பாடி,  மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 453 கிராம குடியிருப்புகளுக்கும்,   நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர் மற்றும் அத்தனூர் என மூன்று நகரப் பேரூராட்சிகளுக்கும்,  மல்லசமுத்திரம், வெண்ணந்தூர்,  ராசிபுரம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 117 கிராமக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் டிச.6 ஆம் தேதி முதல் டிச.8 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு  நிறுத்தப்படுகிறது. 
எனவே,  பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  மேலும், இந்த மூன்று நாள்களுக்கு உள்ளூரில் உள்ள நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு டிச.9 ஆம் தேதி முதல் மின் மோட்டார் இயக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com