பூச்செடிகள், காய்கறி செடிகள் விற்பனை அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதால், அலங்கார பூச்செடிகள், காய்கறி செடிகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதால், அலங்கார பூச்செடிகள், காய்கறி செடிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
 வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பாக்கு, தென்னை, வாழை, நீண்டகால பலன்தரும் மரப் பயிர்களும் காய்ந்து கருகிப்போயின. அதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
 குடியிருப்புப் பகுதிகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டதால், வீடுகளில் முகப்பு, தாழ்வாரம், புறக்கடை மற்றும் மாடிகளில், அலங்கார பூச்செடிகள், காய்கறிச் செடிகள் வளர்ப்பதைக் கைவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் மேலோங்கி தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதனையடுத்து, வீட்டுத் தோட்டம் அமைத்து அலங்காரச் செடிகள் மற்றும் காய்கறிச் செடிகள் வளர்ப்பதில் பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
 அதனால், அழகு தோற்றமளிப்பதோடு சாகுபடி பலனளிக்கும் ரோஜா, மல்லிகை, செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு பூச்செடிகளும், கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறி செடிகளும், மணி பிளாண்ட் என குறிப்பிடப்படும் அலங்கார பூச்செடிகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து வாழப்பாடியில் செடிகள் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் கூறியதாவது: நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் வீடுகளில் செடிகள் வளர்ப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்களை வீட்டுத் தோட்டத்தில் விளைவிக்கின்றனர். இரு ஆண்டுகளாக மழையில்லாததால் வீட்டுத் தோட்டங்களை பராமரிக்க முடியாமல் போனது.
 நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால், வீட்டுத் தோட்டம் அமைத்து அலங்கார செடிகள் மற்றும் காய்கறி செடிகள் வளர்ப்பில் பெண்கள் மீண்டும் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், செடிகள் மற்றும் விதைகள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என்றனர்.
 வாழப்பாடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சித்ரா பிரகாஷ் கூறியது:
 கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. அதனால், வீட்டுத்தோட்டத்தில் அவரை, மிளகாய், சுரைக்காய், தம்பட்டங்காய், புதினா, வெந்தயம், வல்லாரை உள்ளிட்ட காய்கறி செடிகளை பயிரிட்டுள்ளேன். அதிலிருந்து அறுவடை துவங்கியுள்ளதால், வீட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் கீரைகள் வாரம் இருமுறை கிடைத்து வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com