மருந்து சீட்டுகளில் கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சடித்து வழங்கல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு மருந்து சீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு மருந்து சீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடித்த மருந்து சீட்டுகளை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் பூங்கொடி, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸிடம் வழங்கினார். இதுதொடர்பாக, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியிருப்பதாவது:
 நவீன கால சூழ்நிலைக்கு ஏற்ப பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக திறந்த வெளியில் மலம் கழிப்பதால் டைபாய்டு, ரத்த சோகை, இளம்பிள்ளை வாதம், மஞ்சள் காமலை, குடற்புழுக்கள், காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
 திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 சேலம் மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்படாமல் உள்ள 1,09,000 வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 தமிழக அரசின் மூலம் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து எழுதி கொடுக்கும் சீட்டில் வீட்டில் கழிப்பறை உள்ளதா, கழிப்பறை இருப்பின் பயன்படுத்தப்படுகிறதா? கழிப்பறையைப் பயன்படுத்துவதன் அவசியம், கைகளை சோப்புப் போட்டு கழுவுதல், விரல் நகங்களை அதிகம் வளரவிடாமல் நறுக்கி தூய்மையாக வைத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு விவரங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.
 மேலும், பள்ளி மாணவ, மாணவியரையும் இத்தகைய பணியில் பங்கேற்கச் செய்யும் வகையில் இதற்கென தனி வருகைப் பதிவேடு தயார் செய்யப்பட்டு, கழிப்பறை பயன்பாட்டை அவர்களாகவே பதிவு செய்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 கழிப்பறையை பயன்படுத்தாத மாணவர்களின் விவரங்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட்டு, கழிப்பறை அமைக்கப்படாத சூழ்நிலை அறியப்பட்டால் உடனடியாக ரூ.12,000 வழங்கி தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
 டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சேலம் மாவட்ட பொது மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தது போல் தனிநபர் இல்லக் கழிப்பறை அனைவரது இல்லத்திலும் கட்டி அவற்றை பயன்படுத்த செய்வதில் தங்கள் பங்களிப்பை அளித்து திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத தூய்மையான மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், உதவித் திட்ட அலுவலர் வெ.கண்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் பூங்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெüரி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com