முறையான வகையில் குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், முறையாக குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் கேட்டுக் கொண்டார்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், முறையாக குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் கேட்டுக் கொண்டார்.
 சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்பேரில், தனிக்குடிநீர் திட்டம் மூலம் தினசரி 103 மில்லியன் லிட்டர் மற்றும் நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினசரி 10 மில்லியன் லிட்டர் என மொத்தம் 113 மில்லியன் லிட்டர் குடிநீர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 குடிநீர் விநியோகப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, தொடர் கண்காணிப்புப் பணிகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 1,02,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் நலன் கருதி புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
 வீடுகள் மற்றும் வணிகம் சார்ந்த இடங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர், மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண்களில் (0427 - 2212844) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி (1800 - 425 - 6077) மூலமாகவோ அல்லது மாநகராட்சி மண்டல அலுவலர்களை நேரடியாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் சூரமங்கலம் (1800 - 425 - 6011) அஸ்தம்பட்டி (1800 - 425 - 6022) அம்மாப்பேட்டை (1800 - 425 - 6033) கொண்டலாம்பட்டி (1800 - 425 - 6044) பதிவு செய்து கொள்ளலாம்.
 அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு செலுத்த வேண்டிய தொகை குறித்த விவரங்களை அளிப்பார். உரிய தொகை பெறப்பட்ட பின்னர் குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்குதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும்.
 பொதுமக்கள் முறையான குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை பெறுவதற்கான எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது.
 மேலும், சிறப்பு குழுக்களின் ஆய்வின் போது அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால், உரிய வைப்புத் தொகை மற்றும் இதரக் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் இணைப்புகள் முறைப்படுத்தப்படும். தவறும் பட்சத்தில், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.
 இனிவரும் காலங்களில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை வைத்திருப்போர் மீது, சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் ரெ.சதீஷ் எச்சரித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com