புத்தாண்டு தினம்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

புத்தாண்டு தினத்தையொட்டி சேலத்தில் உள்ள முக்கிய கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டு தினத்தையொட்டி சேலத்தில் உள்ள முக்கிய கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டது.
 மேலும், கோட்டை அழகிரி நாதர் கோயில், கடைவீதி ராஜகணபதி கோயில், சாத்தாநகர் பெங்களூரு புறச்சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில், ஜாகீர் அம்மாபாளையம் பழனி ஆண்டவர் ஆசிரமத்திலும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
 டவுன் ரயில்வே நிலையம் சாலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் அபிஷேகம், சிறப்புப் பூஜை, சொற்பொழிவு நிகழ்ச்சிகள், படி பூஜைகள் நடைபெற்றன.
 காவடி பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 தொடர்ந்து, சர்வதேவதா ஹோமம், 108 அஷ்ட லட்சுமி பூஜை, கலச பூஜை, வலம்புரி சங்கு பூஜை, தங்க ரத புறப்பாடு நடைபெற்றது.
 சாமிநாயக்கன்பட்டியில் உள்ள லிங்க பைரவி கோயிலில் அதிகாலை முதல் விளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், மங்கள ஆரத்தி நடைபெற்றது.
 புத்தாண்டையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 அதேபோல மாவட்டத்தில் உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், ஆறகளூர் ஈஸ்வரன் கோயில் மற்றும் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 சங்ககிரியில்...
 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சங்ககிரி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
 சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோயிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
 தேவாலயங்களில்...
 சங்ககிரி நகர்ப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ, புனித அந்தோணியர் ஆலயம் மற்றும் ஐ.என்.பி. தேவசபை ஆகிய தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சிறப்புப் பிராத்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 ஆத்தூரில்...
 ஆத்தூர் அருள்மிகு திரெüபதி அம்மன் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மேலும் கோயில்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 திரெüபதி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீநவநீதகிருஷ்ணர் சன்னதியில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக
 வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் துளுவவேளாளர் மகாஜன மன்றத் தலைவர் எஸ்.அருணாசலம், செயலர் ஏ.திருநாவுக்கரசு, துளுவவேளாளர் சங்கத் தலைவர் ஆர்.வசந்தன், விஜயராம் ஏ.கண்ணன், துணைத் தலைவர் எஸ்.பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 இதேபோல ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீவெள்ளை விநாயகர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 மேலும் அருணகிரிநாதர் தெருவில் அமைந்துள்ள விநாயகர் திருக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 தம்மம்பட்டியில்...
 தம்மம்பட்டி, கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
 தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் யங் டைமண்ஸ்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் 23-ஆவது ஆண்டாக சிவன், அம்பாள், சூரியன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், திருமண் கரடு முருகன் கோயில், எட்டடியான் முத்துசுவாமி கோயில், செந்தாரப்பட்டி ஓணான் கரடு முருகன் கோயில், சிவன் கோயில், கெங்கவல்லி பெருமாள் கோயில், சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்ககளில் புத்தாண்டு சிறப்புப் பூஜைகள், நடைபெற்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com