அம்மாப்பேட்டை பகுதியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி: வணிகர்கள்,பொதுமக்கள் மறியல்; பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் கூறி,

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை. மாநகரப் பகுதிகளில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப்பணிகள் அம்மாப்பேட்டை பிரதான சாலையிலும் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்துக்கு முக்கியமான சாலையாகவும், அதிக அளவிலான வணிகர்களின் வியாபார சாலையாகவும் உள்ள அம்மாப்பேட்டை பிரதான சாலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள், சரிவர மூடப்படாத நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, புழுதி அதிகளவில் பரவுவதால் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அம்மாப்பேட்டை பிரதான சாலையின் மற்றொரு இடமான சிங்கமெத்தை பகுதியில் சனிக்கிழமை காலை பணிகள் தொடங்க வந்த ஊழியர்களையும், பொக்லைன் இயந்திரங்களையும் வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வணிகர்கள், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புதிய பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஏற்கெனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பணிகளை 20 நாள்களில் விரைந்து முடித்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியது:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் அவ்வழியே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் சாலை உள்ளது.
17 இல் கடையடைப்பு போராட்டம்: ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும், மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்தும் அம்மாப்பேட்டை முழுவதும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 17) வணிகர்கள் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com