நீட் தேர்வு விலக்கு சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அழுத்தம் தர வேண்டும்; கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அழுத்தம் தர வேண்டும் என

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அழுத்தம் தர வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.
 சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் அவர் பேசியது:
 நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு முறையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 ஆனால், நீட் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பாடத் திட்டம், மாநில பாடத்திட்டம் வேறாக இருப்பதால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும்.
 எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டத்துக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் உள்ளது.
 இதனிடையே பேராசிரியர் ரஞ்சன்ராய் ஓர் அறிக்கையில், மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு மாநிலங்கள் விலக்குக் கோரலாம். மேலும், மாநிலங்கள் எப்போது பொது நுழைவுத் தேர்வு நடத்த விரும்புகிறதோ அப்போது இணைந்து கொள்ளலாம் என சுட்டிக் காட்டியுள்ளார்.
 இந்த அறிக்கையை மேற்கொள்காட்டி நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழுவின் 92 ஆவது அறிக்கை மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைக்குழு அறிக்கையின் பேரில், மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
 மேலும், நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
 தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இதற்கு மாநில அரசு குறைந்தபட்ச எதிர்ப்பையாவது மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
 கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில அரசின் உரிமையை, மத்திய அரசு பறிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. மேலும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், விரும்பும் மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வை ஏற்கலாம் என்றும், விரும்பும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் எனவும் மிகத்தெளிவாகக் கூறியுள்ளது.
 இதுதவிர தில்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறக் கூடிய சட்ட விவகாரத்தில் 6 மாத காலத்திற்குள் தீர்வு காண விதி உருவாக்க வலியுறுத்தி இருந்தார்.
 அந்தவகையில், தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து சுமார் 5 மாதங்கள் ஆகிறது. எனவே தாமதமின்றி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும்.
 எனவே நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற மாநில அரசு போதிய அழுத்தம் தர வேண்டும் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com