ஆத்தூரில் சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக பார்வையிட்ட மாணவ, மாணவியர்

ஆத்தூர் வந்துள்ள பருவநிலை நடவடிக்கை சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

ஆத்தூர் வந்துள்ள பருவநிலை நடவடிக்கை சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
 ஆத்தூர் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த பருவநிலை நடவடிக்கை சிறப்பு ரயிலை காலை 10 மணிமுதல் பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முதல்நாள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
 இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று பார்வையிட்டனர்.
 இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் அறிவியல் சார்ந்த அறிவை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்புவதற்காக 16 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் உருவாக்கப்பட்டது. இந்த அறிவியல் கண்காட்சி ரயில் 2007 அக்டோபரில் துவங்கப்பட்டது. இதுவரை சுமார் 1,46,000 கி.மீ. பயணம் செய்து 473 இடங்களில் கண்காட்சியை நடத்தி 8 நிலைகளை முடித்துள்ளது. 1650 கண்காட்சி நாள்களில் சுமார் 1.6 கோடி பேர் ரயிலைப் பார்வையிட்டுள்ளனர். இது லிம்கா சாதனை புத்தகத்தில் 12 வெவ்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 இந்தியா முழுவதும் 7 சுற்றுப்பயணத்துக்கு பிறகு அக்டோபர் 2015-இல் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் பருவநிலை மாற்று சிறப்பு ரயில் நடவடிக்கை என்ற பெயரில் மறுவடிவமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2017 பிப்ரவரி முதல் இயக்கப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் வனம், மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், அறிவியல் தொழில்நுட்பத்துறை உயிரி தொழில் நுட்பத் துறை, விக்ரம் ஏ.சாராபாய் அறிவியல் மையம், இந்திய வணிகவியல் நிறுவனம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்.
 இந்த ரயில் தமிழகத்தில் 5 இடங்களுக்கு மட்டுமே வருகிறது. சேலம் கோட்டத்தில் ஆத்தூரில் திங்கள்கிழமை வரை ரயிலை பார்வையிடலாம். இதனையடுத்து 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை கரூரிலும், 24-ஆம் தேதி முதல் கொடைரோட்டிலும், 25 முதல் 27 வரை விருதுநகரிலும், 28 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியிலும் நிற்கிறது. இதனைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பார்த்துப் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com