7-ஆவது நாளாக விசைத்தறிகள் வேலைநிறுத்தம்: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

ஜுலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தவுள்ள ஜி எஸ் டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எடப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட

ஜுலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தவுள்ள ஜி எஸ் டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எடப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், கடந்த 7 நாள்களாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் விசைத்தறி சார்ந்த பணிகளை மேற்கொண்டுவரும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் பதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பகுதி விசைத்தறி நெசவாளர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, நூல் விலை உயர்வை முன்னிறுத்தி எடப்பாடி பகுதி உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஒரு மாத இடைவெளியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தொடர் வேலைநிறுத்தத்தால் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் தினக் கூலிகளாக பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பொருளாதார
நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளித் திறக்கப்பட்ட இச்சூழலில் குழந்தைகளின் கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள், குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு வருவாய் இல்லாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விரைவில் இப்பகுதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு விசைத்தறிக் கூடங்கள் வழக்கம் போல இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
ஓமலூரில்...
தாரமங்கலத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விசைத்தறித் தொழிலாளர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான தறித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜவுளிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தாரமங்கலத்தில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களும் தங்களது கடைகளை அடைத்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேலம் மாவட்டம் முழுவதும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுவதால், நாளொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் என்றும், மூன்று நாள்களுக்கு சுமார் ரூ.30 கோடி வியாபாரம் பாதிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சேலம் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள்கூறும்போது ஜவுளி உற்பத்தி செய்யும் தறி தொழிலாளர்கள் குடிசைத் தொழிலாகஇத்தொழிலை செய்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சிறுவியாபாரிகள் விற்பனை செய்யும்போது, அவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், விசைத்தறி உரிமையாளர்களிடம் அவர்கள் கொண்டுள்ள தொழில் பாதிக்கும்.இதனால், விவசாயிகளைப் போல நெசவுத் தொழிலாளர்களும் தற்கொலை செய்யும் சூழல் ஏற்படும்.இதனால் ஜவுளித் தொழில் நலிவடைந்து விடும். எனவே 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சங்ககிரியில்...
இளம்பிள்ளையில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் புதன்கிழமை வேலைநிறுத்ததில் ஈடுபட்டு கண்டனப் பேரணி நடத்தினர்.
இளம்பிள்ளையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் அருகில் இருந்து தொடங்கிய பேரணி சௌண்டம்மன் கோயில், சந்தைப்பேட்டை, பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை பேருந்து நிலையம், உழவர் சந்தை, புதுரோடு, உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி, வேம்படிதாளம், தப்பக்குட்டை, இடங்கணசாலை, கே.கே.நகர், எழுமாத்தானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியுடன் இணைந்த பல்வேறு இயந்திரங்கள் வைத்து தொழில் புரிந்து வருபவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இப் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர் சாம்பலிங்கமூர்த்தி தலைமை வகித்தார்.
இது குறித்து பேரணி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது:
இளம்பிள்ளை மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழில் இயந்திரங்கள் உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆயிரக்கணக்கானோர் தொழில் புரிந்து வருகின்றனர். மேலும் இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கப்படும் சேலைகள், சுடிதார், பெண்கள் அணியும் மேல்சட்டை மற்றும் உள்ளாடைகள் பல வண்ணங்களில் ஏழை எளியவர்கள் முதல் அனைவரும் வாங்கி சென்று வருகின்றனர். இதனை நாங்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகிறோம். இந்தத் தொழிலுக்கு எப்போதும் இல்லாத அளவில் விற்பனை வரி அதாவது ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜவுளித் தொழில் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி தொழில் பாதிப்படைவதோடு தொழிலாளர்கள் குடும்பங்கள் சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com