ஓமலூர் அருகே 13-ஆம் நூற்றாண்டு துர்க்கை சிற்பம் கண்டெடுப்பு

சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துகளுடன் கூடிய துர்க்கை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துகளுடன் கூடிய துர்க்கை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சீனிவாசன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள், ஜீவநாராயணன், பெரியார்மன்னன் ஆகியோர் அடங்கிய குழு ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த கல்லை ஆய்வு செய்த போது, 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துகளுடன் கூடிய துர்க்கை சிற்பம் எனத் தெரியவந்தது. இந்தப் பலகைக் கல்லானது நான்கு துண்டுகளாக உடைந்துள்ளது. அதில் இரண்டு சிறிய பகுதிகள் காணாமல் போய் உள்ளன. பலகைக் கல்லின் ஒரு புறம் துர்க்கையின் உருவமும், மறுபுறம் கல்வெட்டும் உள்ளது.
 இதுகுறித்து, வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியது:
 துர்க்கை சிற்பத்தின் மேற்பகுதியில் வலப்புறம் கோழியும், இடப்புறம் ஓர் பறவையும் பிறை நிலாவும் காட்டப்பட்டுள்ளது. தலைக்கு மேல் குடையும், இருபுறமும் வெண்சாமரமும், கீழ்புறம் சிங்கமும் குத்துவிளக்கும் காட்டப்பட்டுள்ளன. நான்கு கரங்களுடன் காணப்படுகிறது. இடது கையில் வில் உள்ளது. கீழ்புறம் இருக்க வேண்டிய எருமைத் தலையும், மானும் உடைந்து போன கல்லில் காணாமல் போய் உள்ளது.
 இந்தக் கல்வெட்டானது சோழமன்னன் 3-ஆம் ராஜராஜனின் 14-ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி.1230 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. 15 வரிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது.இ இதன் உயரம் 110 செ.மீ. அகலம் 95 செ.மீ, தடிமன் 10 செ.மீ. 3-ஆம் ராஜராஜசோழன் காலத்தில் கொங்குப் பகுதியில் வீரசோழ மண்டலத்தில் அமைந்திருந்த பூவாணிய நாட்டை ஆட்சி செய்யும் ஏழுகரை நாட்டு இடங்கை மாசேனையினருக்கு அத்தானி நல்லூர் என்ற ஊரின் நிலவரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்கையும், அந்த நிலப்பகுதியில் உள்ள மேல்நோக்கிய மரமும், கீழ் நோக்கிய கிணறையும் தர்மமாகக் கொடுத்துள்ளனர்.
 பூவாணிய நாடு என்பது தற்போதைய ஓமலூர், தாரமங்கலம், பென்னாகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளாகும். ஏழுகரை நாடு என்பது ராசிபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியாகும். மாசேனை என்பது மிகப்பெரிய படைப் பிரிவையும் அதன் தலைமையையும் குறிக்கும். அத்தானி நல்லூர் என்பது தற்போது ராசிபுரம் அருகே உள்ள அத்தனூராக இருக்கலாம். இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com