"நீட்'தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம்

நீட் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மாநில மாநாடு சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ.வின்சென்ட் பால்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் மா.நம்பிராஜ் வரவேற்றார். மாநாட்டு அறிக்கையை மாநிலப் பொதுச் செயலர் கோ.முருகேசன் வாசித்தார். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர்கள் பிரபாகர் கோவிந்தராவ் அர்டே, வா.அண்ணாமலை, தமிழக தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
 தேசிய புதிய கல்விக் கொள்கை, நீட் பொது நுழைவுத் தேர்வு பாதிப்புகளுக்கு தீர்வு காண்போம் என்ற தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். ஊதிய முரண்பாடுகள் குறித்து ஐபெக்டோ பேராசிரியர் பெ.ஜெயகாந்தி பேசினார்.
 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
 மத்திய அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று 1.1.2016 முதல் பணப்பயன்களை நிலுவைத் தொகையுடன் வழங்குவது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது போல இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
 அகவிலைப்படி உயர்வு 132 விழுக்காட்டை கடந்துவிட்டதால், மத்திய அரசு போல அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து தமிழக அரசு வழங்க வேண்டும்.
 தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரால் சமூக நீதியைப் பாதிக்கும் கல்விக் கொள்கை பாதிப்பையும் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவதையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
 நீட் பொது நுழைவுத் தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு விதித்தளர்வு வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்து சட்டம் இயற்றுவதன் மூலம் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
 தொடக்கக் கல்வியில் தாய்மொழி வழிக்கல்வியே முற்றிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆங்கிலம் தொடக்கக் கல்வியில் பாடமொழியாகப் பின்பற்றப்படலாம். ஆனால், பயிற்று மொழியாக திணிக்கப்படுவதைத் தவிர்த்திட வேண்டும்.
 எஸ்.சி, எஸ்.டி, பிரிவில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இனச்சுழற்சி நாடுநர்கள் இல்லாததால் 1997 முதல் நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
 மேலும், கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வும் அனுமதிக்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com