பலத்த மழை சேலம் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ஓமலூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சேலம் விமான நிலைய சுற்றுச்சுவர் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

ஓமலூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சேலம் விமான நிலைய சுற்றுச்சுவர் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்து சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அப்போது விமான நிலையத்தைச் சுற்றிலும் உயரமான பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டது.  விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதி அனைத்தும் விவசாய நிலங்கள் என்பதாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பகுதியில் தற்போதுள்ள வறட்சியான நிலையிலும் தண்ணீர் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக விமான நிலைய சுற்றுச் சுவர் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. மேலும், இதன் அருகில் இருந்த செந்தில் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் சுவர் விழுந்ததால், கரும்புகளும் சேதமடைந்தன.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
விமான நிலையத்தைச் சுற்றிலும் சுமார் 12 அடி உயரத்தில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவர் தரமில்லாமல் அமைத்துள்ளதால், அவ்வப்போது இடிந்து விழுந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மழை பெய்ததால் கரும்புத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. அந்த நேரத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால், விவசாயிகள், தொழிலாளர்கள் உயிர் தப்பியுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும்
என்றனர்.
எடப்பாடியில்...
எடப்பாடி பகுதியில் வியாழக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எடப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வெள்ளரிவெள்ளி, சித்தூர், மொரசப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கசிவுநீர் குட்டைகள், சிறிய தடுப்பணைகளில் மழை நீர்  நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மா, தென்னை, வாழைத் தோட்டங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், இன்னும் சில நாள்களுக்கு வயல்களுக்கு நீர்ப் பாய்ச்ச வேண்டிய தேவை ஏற்படாது என அப்பகுதி விவசாயிகள் கூறினர். தொடர்ந்து இரு நாள்களாக பெய்த பலத்த மழையால் நிலத்தடி நீர்மட்டம், சற்றே உயர்ந்துள்ளதால், விவசாய வயல்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீராதாரம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர். பலத்த மழை பெய்ததையடுத்து அப்பகுதி மானாவாரி விவசாயிகள் கோடை உழவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
தேவூரில்...
சங்ககிரி வட்டம், தேவூரில்
வியாழக்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்துள்ளது.
சங்ககிரி வட்டப் பகுதியில் வியாழக்கிழமை பகலில் கடும் வெப்பம் நிலவியது. பின்னர் மாலையில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சங்ககிரி நகர் பகுதியில் 8.4 மி. மீட்டர் மழை பெய்தது. சங்ககிரி வட்டம், தேவூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு 57 மி. மீ. மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூரை வீடு இடிந்தது: தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி ஊராட்சி வட்டாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி சீரங்காயி. இவரது கூரை வீடு வியாழக்கிழமை இரவு பெய்த மழையினால் இடிந்து சேதமடைந்தது. இதனையடுத்து அவருக்கு சங்ககிரி வருவாய்த் துறையின் சார்பில் வருவாய் ஆய்வாளர் சி.எம்.கவிதா, கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன் ஆகியோர் நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com