வேளாண் குழுக்களில் நடப்பு விவசாயிகளை உறுப்பினர்களாக நியமிக்க வலியுறுத்தல்

வேளாண் குழுக்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடப்பு விவசாயிகளை மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேளாண் குழுக்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடப்பு விவசாயிகளை மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை கூட விற்பனைக்குழுச் செயலாளர் செல்லதுரை, சேலம் மாவட்ட சேலம் வணிக விற்பனைக்குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டு, கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
இதையடுத்து விவசாயி அபிநவம் ஜெயராமன் பேசியது:
வேளாண்மைத் துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்படும் உற்பத்திக் குழு, விற்பனைக் குழு உள்ளிட்ட குழுக்களில் விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் குறிப்பாக இருசக்கர வாகன மெக்கானிக், தொழிலதிபர்களை நியமித்திருக்கின்றனர்.
மேலும், குழுக்களில் உறுப்பினர்களை நியமித்தது தொடர்பாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பினராக உள்ளவர்கள் குறித்து ஏதும் தெரிவிக்கப்பட்டவில்லை. குழு உறுப்பினர் நியமனத்தில் போதிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றார்.
அப்போது பதில் அளித்து பேசிய சேலம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலாளர் செல்லதுரை, உறுப்பினர் நியமனத்துக்கு யாரையும் கேட்க தேவையில்லை
என்றார்.
அதிகாரியின் இந்தப் பதிலை கேட்டு ஆத்திரமடைந்த விவசாயிகள் இருக்கையை விட்டு எழுந்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் இருக்கையின் முன் திரண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசிய அதிகாரி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு கூட்டத்தை விட்டு வெளியேறுவதாகக் கூறினர்.
விவசாயிகளின் திடீர் போராட்டத்தினால் கூட்டத்தில் பெரும் கூச்சல், பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், விற்பனைக் கூட செயலாளர் செல்லதுரையின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி செல்லதுரை, தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் சமரசம் அடைந்தனர்.
வசிஷ்ட நதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், கடந்த 4 மாதங்களுக்கு மேல் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள், கூட்டுறவுத் துறையில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்திருந்தும், இதுவரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்திடவில்லை என்றும், அதேபோல மத்திய அரசு கொடுத்த கடன் தொகையும் இதுவரை விவசாயிகளை வந்து சேரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com