இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழக பல்கலைக்கழகங்களைக் கொண்டு வர நடவடிக்கை: உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால்

இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழக பல்கலைக்கழகங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழக பல்கலைக்கழகங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தேசிய அளவிலான சமூக அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலருமான சுனில் பாலிவால் பேசியது:  தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தேசிய தர நிர்ணயம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது,  அகில இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 6-ஆவது இடத்திலும்,  பாரதியார் பல்கலைக்கழகம் 20-ஆவது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 41-ஆவது இடத்திலும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.  அண்ணா பல்கலைக்கழகம் போல மற்ற பல்கலைக்கழகங்களையும் முதல் 10 இடங்களில் கொண்டு வரும் வகையில், நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், அறிவுசார் பல்கலைக்கழங்களுக்காக மத்திய அரசு வழங்கும் ரூ.200 கோடி முதல் ரூ.1,000 கோடி நிதி இந்த பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து, சர்வதேச தர வரிசைப் பட்டியலிலும் தமிழக பல்கலைக்கழகங்கள் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
 பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்டு வந்த தேவையற்ற நடைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன.  மாநிலத்துக்குள் வேறு கல்லூரிக்கு கல்வி பயிலச் சென்றால் இடம்பெயர்வு சான்றிதழ் (மைகிரேஷன்) வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், மீண்டும் பெற காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை பதிவு தவிர்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கினால் புதிய சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய,  தேசிய கல்விக்குழுமத்துடன் இணைந்து அனைத்து சான்றிதழ்களையும் கணினி மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொலைதூரக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இரண்டுக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர்களைப் போல,  கலை, அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இறுதியாண்டில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பாடத் திட்டங்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக் கோப்புகள் மாயமான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.  விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 13 பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரம் தொகுப்பூதியப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களை பணி நிரந்தரப்படுத்துவது தொடர்பாக, நீதிமன்றங்கள் அளித்த வழிகாட்டுதல்படி அரசு முடிவு எடுக்கும்.
பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  வரும் ஜனவரி மாதத்துக்குள் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
பேட்டியின் போது,  பதிவாளர் மா.மணிவண்ணன், துணை வேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் கே.தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com