நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி போராட்டம்

சேலத்தில் நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை அகற்றக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை அகற்றக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி அழகாபுரம் பகுதியில் உள்ள இஸ்மாயில்கான் ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனால்,
ஓடையின் வழித்தடம் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு காரணமாக இஸ்மாயில்கான் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இந்த தனியார் மருத்துவமனை, மாநகராட்சிக்கு சொந்தமான வழித்தடத்தையும், அரசு நிலத்தையும் கையகப்படுத்தி, பொதுமக்களின் பாதையையும் சுவர் எழுப்பி அடைத்து விட்டனராம்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்யவேண்டும். வழித்தடத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாததால், தாங்களும் ஆக்கிரமிப்பை செய்கிறோம் என புதிய தமிழகம் கட்சியினருடன் இப்பகுதி மக்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் நீரோடை செல்லும் பகுதியில் குடிசை அமைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மூன்று நாள்களுக்குள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com