இருவேறு விபத்துகளில் 3 பேர் சாவு

ஓமலூர் அருகே நடைபெற்ற இருவேறு விபத்துகளில், 3 பேர் உயிரிழந்தனர்.

ஓமலூர் அருகே நடைபெற்ற இருவேறு விபத்துகளில், 3 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் மூலக்காடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கதுரை (30). அதே பகுதியைச் சேர்ந்த லாரி கிளீனர் ரமேஷ்(29). இருவரும் தருமபுரியில் லாரி கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வியாழக்கிழமை தருமபுரியில் இருந்து சேலத்துக்கு இரும்புத் தகடுகளை லாரியில் ஏற்றி கொண்டு வந்தனர். இதேபோன்று, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் தனகுமார், குமார் ஆகிய இருவரும் கர்நாடகத்தில் இருந்து மக்காசோளம் லோடு ஏற்றிக்கொண்டு வந்தனர்.
இரண்டு லாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஓமலூர் அருகேயுள்ள தாசசமுத்திரம் பகுதியில் வந்துகொண்டு இருந்தனர். மக்காசோளம் ஏற்றிய லாரி அதிவேகமாக முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பாக சாலையை கடந்து பத்து அடி நீளமுள்ள சாரை பாம்பு சென்றது. அப்போது பாம்பு மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுனர் தனகுமார் லாரியை திடீரென நிறுத்தியுள்ளார்.
அப்போது இரும்பு தகடுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தங்கதுரை முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருப்பதற்காக, லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது இரும்பு தகடுகள் லாரி கேபினை உடைத்துக்கொண்டு லாரி ஓட்டுநர் தங்கதுரை, கிளினர் ரமேஷ் ஆகியோரை வெட்டி வெளியே தள்ளியது.
இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்துக்கு காரணமான பாம்பும் லாரி மோதி உயிரிழந்தது.
தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி பழனி (28). இவர் தனது உறவினர் பாலுவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மேட்டூரில் இருந்து ஓமலூரை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த பாலு காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






















 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com