சேலம் மாவட்டத்தில் கன மழை: குடியிருப்புப் பகுதிகளில் ஏரி நீர்  புகுந்தது

சேலத்தில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து,  அம்மாபேட்டை குமரகிரி ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சேலத்தில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து,  அம்மாபேட்டை குமரகிரி ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேலத்தில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையின் காரணமாக,  அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி எரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
தண்ணீர் வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழை நீர் முழுவதும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.  பச்சப்பட்டி, அசோக் நகர், ஆறுமுக நகர், மாருதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் சாலைகளில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியதால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மழை நீருடன், சாக்கடை கழிவு நீரும் குடியுருப்புகளுக்குள் நுழைந்ததால்,  மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றிடவும், முதியவர்களை வீடுகளில் இருந்து வெளியே கொண்டு வரவும், அப்பகுதி இளைஞர்கள் உதவி புரிந்தனர்.
இதில் ஆறுமுக நகர் பகுதியில், போதிய கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால், கழிவு நீருடன் கலந்த மழை நீர், வீடுகளுக்குள் சமையலறை வரை புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட பாத்திரங்கள் அனைத்தும் நீரில் மிதந்தன.  
பெரும்பாலான மக்கள்  சாலைகளிலும், மாடிகளிலும் தஞ்சம் அடைந்தனர். மேலும் மழை நீருடன் பல்வேறு விஷ பூச்சிகளும் மழை நீருடன் வீடுகளுக்குள் வந்ததால் விடிய விடிய வேறு வழியின்றி, சாலைகளிலேயே குழந்தைகளுடன் காத்திருந்தனர்.  இளைஞர்களும், தமுமுக-வினரும், தாமாகவே பணிகளை மேற்கொண்டனர். மழை நீரை வெளியேற்றும் பணியிலும், கால்வாயை பெரிது படுத்தும் பணியிலும் ஈடுபட்ட அவர்கள், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் பல மணி நேரமாக கோரிக்கை விடுத்தும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
சங்ககிரியில் 105 மி.மீ. மழை
சேலம் மாவட்டத்தில் சராசரியாக 65.6 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சங்ககிரியில் 105.3 மில்லிமீட்டரும், வாழப்பாடியில் 102.3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
அதைத்தொடர்ந்து தம்மம்பட்டி-90.6, கெங்கவல்லி-90.4, ஓமலூர் -89, ஏற்காடு -87, எடப்பாடி-78, சேலம்-60, காடையாம்பட்டி,பெத்தநாயக்கன்பாளையம்-58, வீரகனூர்-52, ஆத்தூர்-46, மேட்டூர்-31, ஆனைமடுவு-30, கரியகோயில்-5 என மாவட்டத்தில் மொத்தம் 984 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வாழப்பாடியில்
வாழப்பாடியில்  புதன்கிழமை நள்ளிரவு 103.2 மி. மீ., அளவுக்கு கன மழை பெய்தது.  இரு ஆண்டுக்கு பின் பலத்த மழை பெய்ததால்,  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன மழையால்,  பள்ளமான பகுதிகளிலும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  கோதுமலை வனப் பகுதியில் ஜப்பான் நிதியுதவியுடன் காடு வளர்ப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும்,  நீர்நில வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தடுப்பணையும் நிரம்பின.
 மாரியம்மன்புதூர் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் அமைக்கப்பட்ட மண்குட்டையை நீரோடை மழைநீர் அடித்து சென்றது.  
காமராஜ் நகர் ஆத்துமேடு,  கிழக்குக்காடு பகுதியில் இணைப்புச்சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இடையப்பட்டி அய்யனார் கோவில் ஓடை என குறிப்பிடப்படும் நெய்யமலை சின்னாற்று நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சங்ககிரியில்
சங்ககிரியில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
சங்ககிரி நகரம்,  அவற்றின் கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.  இதையடுத்து, புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையளவு 105.3 மி.மீ. ஆகும்.
சங்ககிரியில் 2009-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை அக்டோபர் 4-ஆம் தேதி இரவு பெய்த மழையே அதிகமாக பெய்துள்ளது. 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-இல் 100.10 மில்லி மீட்டரும், அக்டோபர் 6-இல் 98.8 மில்லி மீட்டரும், 2015-ஆம் ஆண்டில் அக்டோபர் 6-இல் 87 மில்லி மீட்டரும் பெய்துள்ளது.
பலத்த மழையால்,  இருகாலூர் அருகே உள்ள செல்லப்பம்பட்டி புது ஏரி நிரம்பியுள்ளது.  கடந்த 3 ஆண்டுகளாக  வறண்டிருந்த   மோரூர் மேற்கு ஊராட்சியில் உள்ள மோரூர் ஏரி தற்போது நிரம்பி வருகிறது. இதுதவிர, நிலத்தடி நீர் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.புதூரில் பழனிசாமி,  சங்ககிரி அருகே உள்ளசின்னாகவுண்டனூர் மாணிக்கம்,  புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் காமராஜ் ஆகியோரின் வில்லை வீடுகளின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தன.
தம்மம்பட்டியில்
தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை  அதிகாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது.  இதனால், வறட்டாறு உள்ளிட்ட சிறு ஆறுகளில்  லேசாக  ஆற்று நீர்  லேசாக  பெருக்கெடுத்து வரத் துவங்கியது.  தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி உள்ளிட்ட  பிரதான ஊர்களில் சாலைகளில்  நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தெடாவூர், தம்மம்பட்டியில்  புறம்போக்கு நிலத்தில் இருந்த வீட்டுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது.  
செந்தாரப்பட்டியில்  இலங்கை (வடக்கு) முகாமில் இருந்த நசீரா என்ற பெண்ணின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இருப்பினும்,  யாருக்கும் சேதமில்லை.
எடப்பாடியில்
எடப்பாடியில்  விடிய விடிய  பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
எடப்பாடி, அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளான மொரசப்பட்டி,   சித்தூர்,  செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பகல் முழுவதும் அதிக அளவில் வெப்பம் இருந்தது. இந்த நிலையில்,  இரவு 11 மணி அளவில் கன மழை கொட்டத் தொடங்கியது.  இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கன மழையால் விடிய, விடிய பெய்தது.
இதனால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.  பேருந்து நிலையம் எதிரில் உள்ள உழவர் சந்தைக்குச்சல்லும் பாதை முழுவதும் மழைநீர் தேங்கியது.  நாச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அதிகஅளவு மழைநீர் தேங்கியதால்,  காலை நேரத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளிக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.   ஆசிரியர்கள், பணியாளர்கள் மழைநீரை அகற்றிய பின்னர்,  மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com