பெரியார் பல்கலை. பேராசிரியருக்கு விஞ்ஞானி விருது

பெரியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் த.கோபிக்கு,  தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் த.கோபிக்கு,  தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட வந்தவாசியைச் சேர்ந்தவர் த.கோபி (43).  மின் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், எலும்பு ஒத்த பொருளைத் தயாரித்து மூட்டு அறுவை சிகிச்சையின்போது, பயன்படுத்தும் உலோகத்தின் மீது பூசி,  இதனுடைய ஆயுள்காலம்,  உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் அதிகரிக்கச் செய்துள்ளார்.  இது எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு பெருமளவில் குறைவதோடு,  பொருத்தப்படும் உலோகத்தின் ஆயுள்காலம் எளிதில் தீப்பிடிக்காமல்,  நீட்டிக்கவும் முடியும்.
இதையடுத்து, உயிர் மருத்துவத் துறையில் இவரது ஆராய்ச்சி பங்களிப்பைப் பாராட்டி, தமிழ்நாடு மாநில மருத்துவ அறிவியல்- தொழில்நுட்பவியல் கழகம் சார்பில் 2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோபிக்கு விருதை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  வழங்கினார் . இதையடுத்து, கோபியை பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மா.மணிவண்ணன், பேராசிரியர்கள் பாராட்டினர்.
இதுகுறித்து த.கோபி:-
எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. மேலும், அறுவைச் சிகிச்சையின்போது,  வைக்கப்படும் உலோகம் துருப் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை துருப்பிடித்தால், மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து அந்த உலோகத்தை மாற்ற வேண்டியிருக்கும்.
எனது ஆராய்ச்சியில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலோகத்தின் மீது பூச்சு உருவாக்கப்படுகிறது. இதனால், துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவதுடன், அறுவை சிகிச்சைக்கான செலவும் குறையும். இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகுந்த பயனளிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com