சேலத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

சேலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாக்கடை கழிவுடன் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

சேலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாக்கடை கழிவுடன் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.
 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் குமரகிரி ஏரி நிரம்பி பச்சப்பட்டி பகுதி முழுவதும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சேலம், ஏற்காடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
 சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள குப்தா நகர், சினிமா நகர் மற்றும் சத்யா நகர் போன்ற பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராததால், மழை நீர் செல்ல வழியில்லாமல், ஊருக்குள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.
 இதில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் புகுந்ததால் பொது மக்கள் பெரும் சிரமமடைந்தனர். வீடுகள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், மருந்துக் கடைகளிலும் மழை நீருடன் கழிவு நீரும் புகுந்ததால், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
 இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாகவும், சாக்கடையில் உள்ள தூர்களை அகற்றக் கோரி பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இது போன்ற நிலை ஏற்பட்டதாகக் கூறி, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
 மேலும், ஏற்காட்டில் பெய்த மழையால் அடிவாரத்தில் உள்ள புது ஏரி நிரம்பி சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்தது.
 இதில் கோரிமேடு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீல் புகுந்தது. இதில் கார், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏடிசி நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் முழ்கியது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்.
 சேலம் மாநகரம் சத்திரம் திருமால் நூலகம், சூரமங்கலம் மாநகராட்சி வரிவசூல் மையம், அங்கன்வாடி மையம், அம்மா உணவகம், 27-ஆவது கோட்ட சுகாதார அலுவலகம் மற்றும் பாவேந்தர் தெரு, சத்திரம் காமராஜர் மண்டபம் பகுதிகளில் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து குளம்போல தேங்கி நிற்கிறது.
 389 மி.மீ. மழை: சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு விவரம் (மி.மீ.): ஏற்காடு - 66, சேலம் - 64, எடப்பாடி - 44, ஓமலூர் -40, ஆத்தூர் - 38, கரியகோயில் -35, ஆனைமடுவு -33, பெத்தநாயக்கன்பாளையம் -22, மேட்டூர் -14, காடையாம்பட்டி - 9, சங்ககிரி -7, கெங்கவல்லி -4 என மாவட்டத்தில் சுமார் 389 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com