நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு முத்ரா திட்டத்தில் கடனுதவி: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 சேலம் மாவட்ட அளவில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார்.
 நிகழ்ச்சியில், முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவியை பயனாளிகளுக்கு வழங்கி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
 வங்கியில் கணக்குத் தொடங்கும் சிரமத்தைப் போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதனால் தற்போது நாடு முழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், 87 சதவீதம் பேர் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளனர். இதில் தமிழகம் முன்னோடியாக 87 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது.
 சேலம் மாவட்டத்தில் 99.9 சதவீதம் பேர் ஆதார் அட்டையைப் பெற்றிருப்பது மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பை காட்டுகிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.66,466 கோடி சேமிக்கப்பட்டிருப்பதன் மூலம், சாதாரண மக்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்கிக் கணக்கு வைத்துள்ளோர் ரூ.12 மட்டுமே செலுத்தி விபத்துக் காப்பீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும 5 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தினால் பாதிக்கப்படுபவர்களின் குடும்ப நலனுக்காக இந்த காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலனுக்காக, அடல் ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இளைஞர்கள், மகளிர் உரிய வேலைவாய்ப்பைப் பெறும் வகையில், முத்ரா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இத் திட்டத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலை வழங்கிட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி பேசியது:
 தமிழகத்தில் கிராமப்புறத் தொழில்முனைவோர் பொருளாதார மேம்பாடு அடைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். இதைப்போல பட்டதாரிகள், தொழில்முனைவோர், மகளிர் உள்ளிட்ட ஆர்வம் மிக்கவர்களை ஒருங்கிணைத்து அனைத்து மக்களும் பயனடையும் வகையில், பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் தரப்படுகிறது. படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக முத்ரா திட்டம் வந்துள்ளது. வங்கிகளே தேடி வந்து கடன் உதவி செய்யும் நிலை பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
 இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாநில அளவிலான வங்கியாளர் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com