கழிவுநீர் தேங்கி புதர்மண்டி கிடக்கும்  வசிஷ்டநதி,  வெள்ளாறு: தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டி கிடக்கும் வசிஷ்டநதி மற்றும் வெள்ளாற்றை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தினர்.

சேலம் மாவட்டத்தில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டி கிடக்கும் வசிஷ்டநதி மற்றும் வெள்ளாற்றை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாழப்பாடி பகுதியில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான அருநூற்றுமலை, சந்துமலை, பெரியகுட்டிமடுவு, பெலாப்பாடி வனப் பகுதியில் வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து  புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி  உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இடத்திலேயே ஆணைமடுவு அணை கட்டப்பட்டதால்,  வசிஷ்டநதியில் மழைக் காலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.
 அணை நிரம்பி உபரிநீர் திறந்தாலோ,  நேரடி ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையில் இருந்த ஆற்றில் தண்ணீர் திறந்தாலோ  வசிஷ்டநதியில் தண்ணீர் வருகிறது. மழைக் காலங்களில் பெலாப்பாடி நீர்வீழ்ச்சியில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் சிறிதளவு வசிஷ்டநதிக்கு வருகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் வறண்டு கிடக்கிறது.  கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து  பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வெள்ளாறு உற்பத்தியாகிறது. அந்த இடத்திலும் கரியகோவில் அணை கட்டப்பட்டதால் வெள்ளாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. அணை நிரம்பினாலே உபரிநீர் ஆற்றில் திறக்கப்படுகிறது. வெள்ளாறு,  பேளூர் ராமநாதபுரம் அருகே வசிஷ்டநதியில் இணைந்து விடுகிறது.
இந்த நிலையில், பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகள்,  நரசிங்கபுரம்,  ஆத்தூர் நகராட்சிகளின் ஒட்டுமொத்த சாக்கடை கழிவுநீரும் சுத்திகரிப்பு செய்யப்படாமல்,  புராணங்களில் புனித நதியாக குறிப்பிடப்பட்டுள்ள  வசிஷ்டநதியில் விடப்படுவதால், சீமைக் கருவேலம் உள்ளிட்ட முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி  கிடக்கிறது. அதனால் வசிஷ்டநதி, மற்றும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அந்நீரை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
எனவே, பருவ மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதைத் தடுக்கவும்,  புதர்களை அகற்றி வசிஷ்டநதி மற்றும் வெள்ளாற்றை தூர்வாரி சீரமைக்கவும், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேரடி ஆற்றுப் பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com