வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்

இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு  ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்டத்தில் அக்.3 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
1.1.2018-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி அக்.3 முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெயர் சேர்த்தல்,  நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு விண்ணப்பப் படிவங்களை பெற்று நிறைவு செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
1.1.2018 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கெனவே உள்ள சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் -7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் -8 மற்றும் குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.  வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அக்.22 -ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.
மேலும், அக்.31 வரை பெறப்படும் விணணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2018 ஜனவரி 5 ஆம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப்பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்து அதிக அளவில் பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் படுத்திடவும், வாக்காளர் வண்ண அட்டையை தங்கள் பகுதியில் மட்டும் தான் பெறமுடியும் என்று இல்லாமல் அனைத்து இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல்களையும் அதிக அளவில் தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல்,  பி.மனோன்மணி,  மருதமுத்து,  கு.சித்ரா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com