சங்ககிரி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத தொடக்கத்தையொட்டி சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாத தொடக்கத்தையொட்டி சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்ககிரி மலையில் சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புரட்டாசி மாத தொடக்கத்தையொட்டி சனிக்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகளில் 900-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து மலை ஏறிச் சென்று சுவாமியை வழிபட்டனர்.
சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தர்கள் குழுவின் சார்பில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத் தொடக்கத்தின் முதல் சனிக்கிழமை மலையில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
நிகழாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.16-ஆம் தேதி முதல் பக்தர்கள் விரதமிருந்து சென்னகேசவப் பெருமாளை வழிபடுவதற்காக செப்டம்பர் 7-ஆம் தேதி வியாழக்கிழமை காலையிலிருந்து மலையடிவாரத்தில் இருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனைப் பொருள்கள், அன்னதானத்துக்கு தேவையான பொருள்கள், எரிவாயு உருளைகளை தலைமைச் சுமையாக எடுத்துச் சென்றனர்.
மலைக்கு சென்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் 28-ஆவது ஆண்டாக காலை, பிற்பகலில் அன்னதானம், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மலைக்கு செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
சங்ககிரி மலையில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி, சென்னகேசவப்பெருமாள் கோயில், தர்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் பாதை சிதிலமடைந்தும், முட்புதர்கள் வளர்ந்தும் காணப்படுவதை சீரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன், வரதராஜபெருமாள் கோயில்களைச் சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்து கோயிலை மறைத்துள்ளன. இக்கோயிலை அடுத்து மலை உச்சிக்குச் செல்லும் பாதை சிதிலமடைந்து காணப்படுகிறது. முட்புதர்கள் வளர்ந்து பாதையை மறைத்து வருவதால் மலைக்குச் செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். சங்ககிரி மலை தொல்பொருள்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, மலைக்குச் செல்லும் பாதையை செப்பனிட்டு, முட்புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொல்பொருள்துறை, மத்திய, மாநில அரசுகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையடிவாரத்தில் பழைமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னிதியும் உள்ளது. கடந்த சில வருடங்களாக தொல்பொருள்துறையினரால் சனிக்கிழமை தோறும் இந்த கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. நிகழாண்டு புரட்டாசி மாதத் தொடக்கத்தையொட்டி சென்னகேசவப்பெருமாளை வழிபட மலைக்கு சென்று திரும்பிய பக்தர்கள், மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில் பூட்டப்பட்டிருந்ததால் தரிசனம் செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com