ஏற்காடு சுங்க சாவடியில் தொடரும் கட்டண கொள்ளை 

சேலம்-ஏற்காடு சாலையில் உள்ள சோதனை சாவடியில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அச்சு படிவ ரசீது இல்லாமல் கட்டணம் வசூலித்து முறைகேடு நடந்து வந்தது. 

சேலம்-ஏற்காடு சாலையில் உள்ள சோதனை சாவடியில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அச்சு படிவ ரசீது இல்லாமல் கட்டணம் வசூலித்து முறைகேடு நடந்து வந்தது.
 இந்தநிலையில், தற்போது ரசீதே வழங்காமல் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வாகனங்களை அனுமதித்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் செயல் வேலியே பயிரை மேய்வதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 சேலம்-ஏற்காடு சாலையில் மலை அடிவாரத்தின் தொடக்கத்திலேயே வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்தச் சுங்கச்சாவடிக்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஒவ்வோர் ஆண்டும் ஏலம் விட்டு ஒப்பந்ததாரர்களைத் தெரிவு செய்து சுங்கச் சாவடியில் வாகனக் கட்டணம் வசூலிக்க அனுமதித்து வருகிறது.
 ஆனால், சுங்கச் சாவடியில் முறையான ரசீது இல்லாமல் கட்டணம் வசூலித்து முறைகேடு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் அச்சுப் படிவ ரசீதும், ரசீது ஆரம்ப வரிசை எண், முடிவு எண் ஆகிய விதிகளைப் பின்பற்றி வசூலிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
 ஆனால் விதிமுறைகளை மீறி முறையான ரசீது வழங்காமல் கட்டணம் வசூலித்து இதுவரை பல லட்சங்கள் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அதேபோல சுங்கச்சாவடியில் வசூலிக்கும் பணம் ஏற்காடு மேம்பாட்டுக்கு செலவிடுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
 தற்போது, சுங்க சாவடிக்கான ஒப்பந்த காலம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஏல விளம்பர அறிவிக்கை வெளியாகி உள்ளது.
 சுமார் ரூ.30 லட்சத்திற்கு ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இதனிடையே முறையான ரசீது வழங்காமல் கட்டண முறைகேடு நடப்பதாகவும், நெடுஞ்சாலை துறை விதிகளை மீறி சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. அதேவேளையில், சேலம்-ஏற்காடு சுங்க சாவடிக்கான ஒப்பந்தம் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறையின் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள்தான் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
 தற்போது ஏற்காடுக்கு வரும் வாகனங்களுக்கு ரசீதே வழங்காமல் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
 இருசக்கர வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.10, கார்களுக்கு ரூ.30 கட்டணம் ரசீதுடன் வழங்க வேண்டும். ஆனால் இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி, ரசீது எதுவும் வழங்காமல் வாகன ஓட்டிகளிடம் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு கட்டண கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
 இதுபோலதான் ஏல தொகையில் வசூலாகும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் பணத்தை ஏற்காடு மேம்பாட்டுக்கு செலவிடப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை. சுங்க சாவடியை வைத்து பல ஆண்டுகளாக பல கோடி முறைகேடு செய்வது வேலியே பயிரை மேய்வதாக உள்ளது என ஏற்காடு வாழ் சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com