நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

நாட்டில் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

நாட்டில் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அ.தி.மு.க. உண்ணாவிரதம் என்ற பெயரில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மத்திய அரசின் மேல்முறையீடு என்பது நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்பதையே உணர்த்துகிறது.
மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறது. இதேநிலை நீடித்தால் போராட்டங்கள் தொடரும். இதுதவிர அரசு அலுவலகங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை ஊழல் தலை விரித்தாடுகிறது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காவிரிக்காக ஒன்றிணைந்த திமுக தலைமையிலான கூட்டணி, வரும் தேர்தல்களிலும் தொடர வேண்டும். காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பா.ஜ.க. எம்எல்ஏ கைது போன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
நாட்டில் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி தேவையில்லை. மத்திய பாஜக அரசின் வகுப்புவாதத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.
தமிழகத்தில் 9 கட்சிகளும் தற்போதுபோல இனிவரும் காலங்களிலும் இணைந்து செயல்பட்டால் மத்திய, மாநில அரசுகளை அகற்ற முடியும். கொள்கைகளை அறிவிக்காமல் கட்சி தொடங்கிய நடிகர் கமலஹாசன் தற்போது கொள்கைகளைப் படிப்படியாக அறிவித்து வருகிறார்.
அவர் அறிவிக்கும் கொள்கைகளில் தெளிவு இல்லை. இடதும்-வலதும் இல்லாமல் நடுவே செல்வேன் என்று கூறும் அவரின் பின்னால் எப்படி செல்வது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com