சுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி: பக்தர்கள் அதிர்ச்சி

சேலம் சுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக

சேலம் சுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து,  பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் சுகவனேசுவரர் கோயிலுக்கு 1980-ஆம் ஆண்டில் வனத் துறையிடம் இருந்து ராஜேஸ்வரி என்ற 4 வயதான பெண் யானை வழங்கப்பட்டது.  இந்த யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
இதனிடையே முன்பக்க இடது காலில் குறைபாடு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், யானைகள் புத்துணர்வு முகாமுக்கு 2008-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்படும்போது காலில் அடிபட்டது. மேலும் யானை முகாமுக்கு செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பவும் கோயிலுக்கே கொண்டு வரப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக யானையின் காலில் உள்ள குறைபாடு மேலும் அதிகரித்ததில், யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து செட்டிச்சாவடியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல் யானையின் கால் பலவீனமடைந்தது. வயது முதிர்வு, காலில் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை.
இதையடுத்து, சென்னை,  நாமக்கல் கால்நடை மருத்துவக் குழுவினரும்,  கோவை மாவட்ட வனத்துறை மருத்துவர் மனோகரன் உள்ளிட்டோரும் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் யானை ஒரே பக்கமாக படுத்து இருந்ததால் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. 
இதன்பின்னர்,  மார்ச் 17-ஆம் தேதி பொக்லைன் மூலம் திருப்பி போடும் போது யானையின் தந்தம் உடைந்ததாகத் தெரிகிறது. மேலும் முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலர் முரளிதரன், உயிருக்கு போராடி வரும்  யானையை கருணை கொலை செய்யலாம் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட்டது.
இயற்கையாகவே இறக்கவிட 
பக்தர்கள் கோரிக்கை: இதையறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பக்தர்கள் பலரும்  யானையை நேரில் வழிபட்டு குணமடைய வேண்டி வருகின்றனர்.  யானைக்கு போதிய சிகிச்சை அளிப்பதில் கோயில் நிர்வாகம் மெத்தனம் காண்பித்துள்ளதாகவும்,  யானையை கருணை கொலை செய்யாமல் இயற்கையாகவே இறக்கவிட வேண்டும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
வேதனை அளிப்பதாக பாகன் உருக்கம்: இதுகுறித்து யானை பாகன் பாஸ்கரன் கூறியது:-
கடந்த 8 ஆண்டுகளாக யானையை பராமரித்து வருகிறேன். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  பொக்லைன் மூலம் புரட்டி போட்டதால்தான் அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் முழுமையாக சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com