மேட்டூர் அணையில் 30 ஆயிரம் கனஅடி நீர்திறப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.  

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.  நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு தண்டோரா செய்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த பருவ மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.  நீர் வரத்து காரணமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.  இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  கடந்த 2-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் சரிந்ததால், உபரி நீர் கால்வாயில் வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.  அதேநேரத்தில்,  டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில்,  பாசனப் பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்ததால்,  புதன்கிழமை காலை வரை நொடிக்கு 17,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் திறப்பு வியாழக்கிழமை காலை நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாகவும்,  பகல் 12  மணிக்கு நொடிக்கு 25 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 3 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாகவும்  அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8, 311 கனஅடியாக இருந்தது.  அணையின் நீர்மட்டம்  117.50 அடியாகவும், நீர் இருப்பு 89.53 டி.எம்.சி. யாகவும் இருந்தது.
நீர் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,500 கனஅடி தண்ணீரும்,  உபரிநீர் கால்வாயில் நொடிக்கு 7,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
வெள்ள அபாய எச்சரிக்கை: கடந்த இரு நாள்களாக கர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளின் உபரி நீர் எந்த நேரமும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால், அணையின் உபரிநீர் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும்.
இதனால் உபரி நீர் கால்வாயின் கரையோரத்தில் உள்ள தங்கமாபுரி பட்டணம்,  சேலம் கேம்ப், தொட்டில் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறை சார்பில்,  தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com