மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 30,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 30,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து மிக அதிக அளவில் உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது.
 இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து ஏற்கெனவே காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 117.50 அடியாக உள்ளது.
 மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.
 மேட்டூர் அணையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்துக் குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரம் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கனூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற்றும் காவேரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயப் படங்கள் (செல்பி) எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விவசாயிகள் நீர்நிலைகளைக் கடக்கும்போது தங்களது கால்நடைகளை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com