மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: மோகன் குமாரமங்கலம்

மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு தலைவர் மோகன்குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு தலைவர் மோகன்குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
 மத்திய அரசு தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 ஏற்கெனவே வந்த தண்ணீரில் 300 டி.எம்.சி. தண்ணீருக்கும் மேல் வீணாகக் கடலில் கலக்க விட்டுவிட்டார்கள்.
 ஏரிகளில் தண்ணீரை நிரப்பாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஏரிகள் அனைத்திலும் நிறைத்து வைத்துக்கொள்ளவது நல்லது. அப்படிநிறைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அரசு இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
 இதற்கான பொறியாளர்களின் ஆய்வுப் பணிகளை துரிதப்படுத்துவதோடும் உரிய நிதிஒதுக்கீடு செய்து உபரிநீர் கால்வாய் அமைத்திட வேண்டும். அதன் மூலம் வசிஷ்டநதி மற்றும் இதர ஏரி, குளங்கள், நீர் நிலைகளுக்கு நீர் செல்ல துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
 இதை நான் முன்பே எனதுஅறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
 மேலும் தாமதிக்காமல் உபரி நீர் வீணாவதைத் தடுத்து மக்கள் பயன்படும்படி ஏரி மற்றும் குளங்களில் நிரப்பி தண்ணீர்பஞ்சம் வராமல் தடுக்க வேண்டும். ஆறு சார்ந்த ஏரிகள் மட்டுமன்றி பிற சிறு சிறு ஏரியாக இருந்தாலும் அதை நிரப்பிக் கொள்வது நல்லது. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஓர் அவசர ஆய்வு செய்து நீர்நிலைகளை மேம்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால்தான் முற்றிலுமாக குடிநீர் மற்றும் சாகுபடிக்கு தேவையான நீரை தேக்கி வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நீர்நிலைகளை நிரப்பிவைத்துக் கொண்டால் 85 லட்சம் மக்கள் பயனடைவார்கள். அரசு விரைந்து இதில் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com