லாரிகளில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட 74 எருமை மாடுகள் பறிமுதல்

ஓமலூர் அருகே  மூன்று லாரிகளில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட  74 எருமை மாடுகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஓமலூர் அருகே  மூன்று லாரிகளில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட  74 எருமை மாடுகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓமலூர் வழியாக தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தருமபுரியில் இருந்து  மாடுகளை ஏற்றிக் கொண்டு  மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இந்த லாரிகளை   சென்னையைச் சேர்ந்த அனிமல் வெல்பர் ஆக்டிவேஷன் அமைப்பின் நிர்வாகிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரிகளில் எருமை மாடுகளை அடைத்து ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனிமல் வெல்பர் ஆக்டிவேஷன் அமைப்பின் நிர்வாகி கணேஷ் தலைமையில் சேலம் மாநகரக் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சூரமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து லாரிகளை சோதனை செய்தனர். அப்போது  மூன்று லாரிகளில் 74 எருமை மாடுகளை அடைத்துக் கொண்டு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று லாரிகள் மற்றும் 74 எருமை மாடுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து  எருமை மாடுகளை அருகிலுள்ள கோசாலைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மூன்று லாரிகள், மற்றும் எருமை மாடுகள் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த அலாவுதீன் என்பருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும், எருமை மாடுகளை முறையான ஆவணங்களுடன் லாரிகளில் ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் ஒரே லாரியில் அதிக எண்ணிக்கையிலான எருமைகளை ஏற்றிச் சென்றது குற்றம் என்றும் அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனிமல் ஆக்டிவேஷன் அமைப்பினர் தெரிவித்தனர்.
இஸ்லாமியர்கள் மறியல்... ஓமலூர் அருகே லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட எருமை மாடுகளை  பறிமுதல் செய்ததைக் கண்டித்து முஸ்லிம்கள் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு மூன்று லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட  74 எருமை மாடுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைக் கண்டித்து இஸ்லாமியர்கள் சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரும்பாலை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக  அனுமதியுடன் கொண்டு சென்ற மாடுகளை காவல்துறை சட்டவிரோதமாக பறிமுதல் செய்து தனியாரிடம் ஒப்படைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அதனால், பறிமுதல் செய்த எருமை மாடுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.  இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  காவல் துறையினருக்கும்,  போராட்டக்காரர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது மனிதநேய மக்கள் கட்சியினர்கூறும்போது மாடுகளை விடுவிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com