சேலத்தில் நாளை தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறி


சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மாணி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி சேலம் மாவட்டம் வருகிறார்.
சேலம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் டிசம்பர் 10-ஆம் தேதி காலை ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமுறை, சுகாதாரமான வாழ்க்கை, சொந்தமாக வீடு அமைத்துத் தருதல், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுதலை உறுதி செய்தல், நலத் திட்டங்கள், கடனுதவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உதவிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விபத்துக் காப்பீடு திட்டம், நல வாரியத்தின் மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்படுதல், துப்புரவு பணியாளர்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், சுகாதாரமற்ற பணிகள் செய்ய விலக்கு மற்றும் மறுவாழ்வுச் சட்டம்-2013 நடைமுறைப்படுத்தலை கண்காணிக்கப்படுதலையும் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மாணி ஆய்வு செய்ய உள்ளார்.
அதைத்தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாலை 3 மணி அளவில் மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர் நலச்சங்கங்கள், பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை பிரதிநிதிகள், சமூக சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை அளிக்கலாம்.
மேலும், சேலம் கோட்ட ரயில்வே மேலாளருடன் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் மாலை 6 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com