ரயில் மறியல்:  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 63 பேர் கைது

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து,   சேலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து,   சேலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திட வேண்டும்.  ரயில்வே துறையை தனியார் மயமாக்கி வரும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். 
இதைத் தொடர்ந்து,  சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ரயில் நிலையம் முன் ஏராளமான தடுப்புகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே,  சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலர் பாலா தலைமையில் கூடிய இளைஞர்கள்,  படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்ய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,  அவ்வழியே வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பக்கோடா விற்பனை செய்து, பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீரென ரயில் நிலையம் முன் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.  அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.  அச் சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
காவல் துறையினரின் தடுப்பையும் மீறி, ரயில் நிலையத்துக்குள் நுழைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்,  ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர். 
  ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற மேலும் சிலரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.  அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
இதைத் தொடர்ந்து,  மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலர் பிரவீண்குமார்,  தருமபுரி மாவட்ட நிர்வாகி எழிலரசு,  ஈரோடு நிர்வாகி சகாதேவன்,  திருப்பூர் நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் உள்பட 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மாநிலச் செயலர் பாலா கூறியது:  ஆண்டுக்கு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி,  ரயில்வே துறையில் தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடாமல் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்திட  வேண்டும். 
ரயில்வே துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com