இணைய வழி பத்திரப் பதிவு முறையை ரத்து செய்யக் கோரி போராட்டம்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழி பத்திரப் பதிவு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, வாழப்பாடியில், சேலம் மாவட்ட பத்திரம் மற்றும் நகல் எழுத்தர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழி பத்திரப் பதிவு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, வாழப்பாடியில், சேலம் மாவட்ட பத்திரம் மற்றும் நகல் எழுத்தர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து விதமான ஆவணங்களையும், முத்திரைத் தாளில் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள், கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ பத்திரங்களை தயாரித்து, பத்திரப் பதிவு அலுவலங்களில் பதிவு செய்து கொடுத்து வந்தனர்.
கடந்த 2017 ஜூலை 12 முதல் அனைத்து பத்திரப் பதிவுகளையும் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை அறிவித்தது. நிகழாண்டில் தொடக்கத்தில் இருந்தே அனைத்து பத்திரப் பதிவு அலுவலங்களிலும் இணைய வழி பத்திரப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.
இணைய வழியில் பத்திரங்கள் பதிவு செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதால், குறித்த நேரத்துக்குள் ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல் பத்திரப் பதிவு அலுவலகப் பணியாளர்கள் மட்டுமின்றி, பத்திர எழுத்தர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலை நீடித்து வருவதால், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழியில் பத்திரப் பதிவு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென பத்திரப் பதிவு எழுத்தர்கள் மற்றும் ஆவண நகல் எழுத்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, இணைய வழியிலேயே பத்திரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதைக் கண்டித்தும், இணைய வழி பத்திரப் பதிவு முறையை முழுமையாக ரத்து செய்து, மீண்டும் முத்திரைத்தாள் முறையிலேயே பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் மற்றும் ஆவண நகல் எழுத்தர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட பத்திர எழுத்தர்கள் மற்றும் நகல் எழுத்தர்கள் சங்கத்தின் சார்பில், வாழப்பாடி சார் பதிவக பத்திர எழுத்தர்கள் பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, முருகன், முத்துசாமி உள்ளிட்டோர் வாழப்பாடி சார்பதிவக அலுவலகத்துக்கு முன் திரண்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com