தேசியத் தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலை. இடம்பெற வாய்ப்பு: துணைவேந்தர் வேண்டுகோள்

தேசியத் தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் இடம் பிடிக்கும் வகையில் பொதுமக்கள் இணையதளம் மூலம் ஆதரவளிக்க வேண்டும் 

தேசியத் தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் இடம் பிடிக்கும் வகையில் பொதுமக்கள் இணையதளம் மூலம் ஆதரவளிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு.
பெரியார் பல்கலைக் கழகத்தில், மத்திய அரசின் தேசியத் தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக் குழு கடந்த 2015 ஆம் ஆண்டு நேரடி ஆய்வு மேற்கொண்டு ஏ கிரேடு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் 47 ஆவது இடத்தையும், 2017 ஆம் ஆண்டு 85 ஆவது இடத்தையும் பிடித்து தமிழக அளவில் அரசு பல்கலைக்கழகங்களில் 4-ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. 
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் அளிக்கப்பெறும் தரமதிப்பீட்டின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களுக்கான நிதி, ஆராய்ச்சித் திட்டங்கள், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவைத் தீர்மானிக்கப்படுகின்றன. 
கல்வி, ஆராய்ச்சி, சமூகப்பணி, போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி போன்ற பல்வேறு அளவுகோள்களுடன்  மனிதவள மேம்பாட்டுத்துறை பொதுமக்களின் கருத்தையும் முக்கிய அளவுகோளாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் தரத்தை தேசிய அளவில் மதிப்பிட உள்ளது. எனவே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பெரியார் பல்கலைக்கழகம் குறித்த தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்யும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
பொதுமக்கள் h‌t‌t‌p://​‌n‌i‌r‌f‌w‌e​b.​c‌l‌o‌u‌d​a‌p‌p.‌n‌e‌t/​G‌r‌i‌e‌v​a‌n​c‌e/
​F​L‌o‌g‌i‌n என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்களுடைய மின்னஞ்சல், சுயவிவரங்களைப் பதிவு செய்து பெரியார் பல்கலைக்கழகத்துக்கான தங்களின் ஆதரவைத் தெரிவிக்கலாம். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் அளிக்கும் அபரிமிதமான ஆதரவுக் கருத்துகள், பெரியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வாக உறுதுணையாக அமையும். இதுகுறித்த தகவல்களை, மாணவ, மாணவியர் தங்களுடைய நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து, வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாக கருத்துகளை மேற்கண்ட இணைய முகவரியில் சென்று  பதிவு செய்ய வேண்டும். 
குறைந்த கால அவகாசமே உள்ளதால், மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கருத்துப் பதிவில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்த  வேண்டும் என துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com