பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு: 14 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு:  கோட்ட  மேலாளர் ஹரிசங்கர் வர்மா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 ரயில்களில் கூடுதல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது எனவும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பார். இளங்கோவன்,  சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவை வியாழக்கிழமை சந்தித்து நாமக்கல் மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் சேலம்-நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களையும்,  கூடுதல் இருக்கைகளையும் ஒதுக்கக் கோரி மனு அளித்தார்.
இதுதொடர்பாக, ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பின்பு  செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரயில் சேவையை விரிவுப்படுத்த தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
அதன்பேரில்,  சேலம் கோட்டத்துக்குள்பட்ட 12 பயணிகள் ரயில் மற்றும் இரண்டு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 
மேலும்,  பண்டிகை தினங்களைக் கருத்தில் கொண்டு திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை வரும் ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். 
பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்துக் கொடுக்க வழிவகை செய்யப்படும். 
 நாமக்கல் வழியே இயக்கப்படும் சென்னை-பழனி ரயிலில் நாமக்கல் பயணிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
ராமேஸ்வரம்-ஓஹா வாராந்திர ரயில் வழித்தடமான கரூர்-ஈரோடு-சேலம் வழித்தடத்துக்குப் பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல,  திருநெல்வேலி-ஜம்முதாவி வாராந்திர ரயில் ஈரோட்டுக்குப் பதிலாக நாமக்கல்-சேலம் வழியாக இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்-சென்னை பகல் நேர ரயிலுக்குத் தேவையான கூடுதல் பெட்டிகள் கிடைத்தவுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் வசதியை பெரிய அளவில் ஏற்படுத்த உள்ளோம். 
சேலம் ரயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ திட்டத்தைச் செயல்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,  மாநகர காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லாததால் நடைமுறைப்படுத்துவது தள்ளிப் போகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com