தம்மம்பட்டியில்  பொங்கல் பொருள்கள் விற்பனை சூடுபிடித்தது

தம்மம்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல்  பானைகள், கரும்புகள், போகிப் பண்டிகைக்கு தேவையான காப்புக் கட்டும் பூக்கள்  விற்பனை வெள்ளிக்கிழமை சூடுபிடித்தது.

தம்மம்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல்  பானைகள், கரும்புகள், போகிப் பண்டிகைக்கு தேவையான காப்புக் கட்டும் பூக்கள்  விற்பனை வெள்ளிக்கிழமை சூடுபிடித்தது.
பொங்கலுக்கு தேவையான  மண்பானைகள் தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயார் செய்யப்படுகின்றன. இதில் வட்டப்பானைகள், உருண்டைப் பானைகள், உலை மூடிகள்  விற்பனை செய்யப்படுகின்றன.  பானைகள் சிறியது ரூ.50,  பெரிய பானைகள் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தம்மம்பட்டி, கெங்கவல்லி, கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் அதிகளவில் பயிரான கரும்புகளை வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர்.இதில் ஒரு ஜோடி கரும்புகள் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு ரூ .200 வரையிலும் விற்கப்பட்டது. 
போகிப் பண்டிகையன்று வீட்டு வாசல்களின் முன் பூலாப் பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, பால இலைகளை ஒன்று சேர்த்து கட்டிவைப்பது வழக்கம்.  இதையொட்டி போகிப் பண்டிகைக்கான பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.  பேருந்து நிறுத்தங்கள், சாலையோரங்களில் பொங்கல் பொருள்களை குவித்துவைத்து விற்பனை செய்து வருகின்றனர். மொத்தத்தில் கடந்த ஆண்டை விட, நிகழாண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அதற்கு இந்த ஆண்டு பெய்த மழையே காரணமாகும்.
கயிறுகள், மணிகள் விற்பனை
  தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காளைகளை அலங்கரிக்க தேவைப்படும் வண்ணக் கயிறுகள், கழுத்துமணிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதான விழாவாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டுப் பொங்கலன்று  எருதுகள், மாடுகள், கன்றுகளை அலங்கரித்து பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.  குறிப்பாக  பாரம்பரிய விளையாட்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை  அலங்கரிக்கவும்,  காளை உரிமையாளர்களின் அந்தஸ்தை காட்டும்வகையில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு அதிகச் செலவு செய்து அலங்கரிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும்.  அதனால்  ஜல்லிக்கட்டு காளைகளுக்கான புது டிசைன்கன் கயிறுகள் வண்ண நிறங்களில் விற்பனை  செய்யப்படுகிறது.
கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூர், தெடாவூர், செந்தாரப்பட்டி பகுதியில்  காளைகளுக்கும், மாடுகளுக்குமான  சிறப்பு கயிறுக் கடைகள் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. கயிறுக்கடைகளில் ஜல்லிக்கட்டு மணி, கோழி மணி, கால் சலங்கை, நெத்தி சலங்கை, கொண்டைக்கயிறு, கழுத்து குஞ்சான் கயிறு, தலைக்கயிறு,  மூக்கணாங் கயிறு, இரும்பு வளையங்கள், பாராசூ மூக்கணாங்கயிறு  என பலவாறாக கயிறுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில்   கொண்டைக் கயிறு 1செட் ரூ.600,  தலைக்கயிறு 1செட் - ரூ.500,   தலைக்கயிறு ரூ.50, கோழிமணிரூ.500, கழுத்து மணி ரூ.700 என்று விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு ஜல்லிக்கட்டுகாளையை அலங்கரிக்க ரூ.1,500 செலவில் அனைத்துக் கயிறுகள், மணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.  
சாதாரண எருதுமாடுகள்,கன்றுகளுக்கு ரூ.200க்கு அனைத்துக் கயிறுகள், மணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  வெள்ளிக்கிழமை மட்டும் 90 சதவீத கயிறுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com