ஓமலூர் காவல் நிலையத்தில் சீமான் கையெழுத்திட்டார்

ஓமலூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்ற நிபந்தனைப்படி வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

ஓமலூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்ற நிபந்தனைப்படி வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
 சேலமே குரல் கொடு அமைப்புத் தலைவர் பியூஸ் மனுஷ் உள்பட 10 பேர் மீது பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகாரில், பியூஸ் மனுஷ் தலைமையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் உள்ளிட்டோர் சட்டத்துக்குப் புறம்பாக நிலம் எடுக்க யார் வந்தாலும் அவர்களை வெட்டுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து, பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் பேசினர். அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இதையடுத்து, புகாரின் பேரில் சேலமே குரல் கொடு பியூஸ் மனுஷ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்த எட்டு பேர் உள்பட 10 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 143, 188, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில், தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற சீமானுக்கு, தினமும் ஓமலூர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலை 10. 05-க்கு தனது வழக்குரைஞருடன் வந்த சீமான் கையெழுத்திட்டார். பின்னர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும், கையெழுத்திட காவல் நிலையம் வரும் போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட வர வேண்டாம் என்று கூறியிருந்த நிலையிலும் சுமார் ஐம்பது பேர் அங்கே கூடியிருந்தனர். அடுத்த உத்தரவு பெறும் வரை ஓமலூர் காவல் நிலையத்தில் சீமான் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஓமலூர் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com