மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்த உள்ளோம்: வானதி சீனிவாசன்

மக்களை பாதிக்கும் பிரச்னைகளைக் கேட்டு அவற்றைத்  தீர்க்கப் போராட்டம் நடத்த உள்ளோம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மக்களை பாதிக்கும் பிரச்னைகளைக் கேட்டு அவற்றைத்  தீர்க்கப் போராட்டம் நடத்த உள்ளோம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்களவைத் தேர்தல் பணியைத் தொடங்கி விட்டோம். தற்போது பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 20 குழுக்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்கக் கையெழுத்து இயக்கம் மற்றும் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம். 
மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளைக் கேட்டு அவற்றைத்  தீர்க்க போராடவும் இருக்கிறோம்.
மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளது. 
இதுகுறித்து மக்களிடம் விளக்கிக் கூற  இருக்கிறோம்.  சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் குறைகள் ஏதும் இருந்தால் அவற்றை கேட்டு அதுகுறித்து மத்திய அரசிடம்  விளக்கம் பெற்று மக்களுக்கு தெரிவிக்கவும் இருக்கிறோம்.
மேலும், வேண்டுமென்றே இந்த திட்டம் பாதிப்பு ஏற்படுத்துகிறது எனக் கூறுவது சரியில்லை.  இதை  ஏற்றுக்கொள்ள முடியாது.   சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி இல்லை என பேசியிருப்பதாகக் கூறுகிறீர்கள்.  ஏற்கெனவே எப்படியெல்லாம் பேசிவிட்டு எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை, பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களான சீர்மிகு நகரம், அம்ரூத், தூய்மை இந்தியா உள்ளிட்டவற்றில் மாநில அரசின் செயல்பாட்டில் தொய்வு இருக்கிறது. இத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
சேலம் கோட்டப் பொறுப்பாளர் முருகேசன்,  இணைப் பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர்கள் மாணிக்கம், சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் சிவகாமி பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com