மலேசிய கர்டின் பல்கலைக்கழகத்துடன் பெரியார் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி ஒப்பந்தம்

உலகின் தலைசிறந்த இருநூற்று ஐம்பது பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலேசிய கர்டின் பல்கலைக்கழகத்துடன் ஆராய்ச்சி, பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட

உலகின் தலைசிறந்த இருநூற்று ஐம்பது பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலேசிய கர்டின் பல்கலைக்கழகத்துடன் ஆராய்ச்சி, பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட உயர்கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
 கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மலேசிய கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு இணை முதன்மையர் பேராசிரியர் ஆ. நாகராஜன் தலைமையிலான மலேசியக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையிலான பேராசிரியர்கள் குழு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் "பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் கொண்டு செல்லும் செயல்திட்டத்துடன் ஆராய்ச்சியைத் தரப்படுத்தி சர்வதேச அளவில் தரப்புள்ளிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர் நடவடிக்கையாக மலேசியாவில் 13 ஆவது மிகப்பெரிய பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக் கழகத்துடன் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இரு நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பரஸ்பரம் ஆய்வகங்களைப் பயன்படுத்தி நவீன உபகரணங்களை கையாளுதல், பயிற்சி பெறுதல், கருத்தரங்குகள் நடத்துதல், பயிலரங்குகள் நடத்துதல், கூட்டான ஆய்வுக் கருத்துருக்கள் மூலம் நிதி பெறுதல் போன்ற பயன்களை அடைய இயலும். இதனால் இத்துறை சார்ந்த பேராசிரியர்கள் பன்னாட்டு அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடக்கமாக பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் கர்டின் பல்கலைக்கழகத்தில் இப்பருவத்தில் பணியிடைப் பயிற்சி பெற உள்ளனர். அதேபோல, இருநாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று அல்லது இரண்டு பருவங்களுக்கான பாடங்களை இரு பல்கலைக்கழகங்களிலும் கற்கும் வாய்ப்புகள் குறித்தும், அதனை அங்கீகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் பல்கலைக் கழகப் பதிவாளர் மா.மணிவண்ணன், டீன் பேராசிரியர் வ. கிருஷ்ணகுமார், புவிஅமைப்பியல் துறைத் தலைவர் எஸ். வெங்கடேஸ்வரன், ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.சுரேஷ், முனைவர் ஏ. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர் செயல்பாடுகளை முனைவர் மு. இராம்குமார் கவனித்து வருகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com