சேலம் வழியாக ரயிலில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு தன்பாத் விரைவு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு தன்பாத் விரைவு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து  சேலம்  வழியாகச் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாகப் புகார் வந்தது. இதன்பேரில், சேலம் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான போலீஸார் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்குச் சென்ற ரயிலில் புதன்கிழமை காலை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது,   ரயில் என்ஜினின் பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் இருக்கைகளுக்கு கீழ் கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன.  இதையடுத்து, அந்த இரண்டு பைகளையும் போலீஸார் மீட்டு சோதனையிட்டனர். இதில் 9 பண்டல்களில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து,  பொதுப் பெட்டியில் இருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாகத் தெரியவந்துள்ளது.  இதனிடையே, கஞ்சாவை மீட்ட போலீஸார்,  நரசோதிப்பட்டியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியது:
கடந்த சில மாதங்களாக ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு தேனி, திருப்பூர் மற்றும்  கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றனர். 
கஞ்சா கடத்துபவர்கள் கஞ்சா பைகளை பெட்டிகளில் உள்ள இருக்கையின் கீழ் பகுதியில்  வைத்து விட்டு,  வேறு இடங்களில் அமர்ந்து விடுகின்றனர்.  சோதனைக்கு செல்லும் போது தப்பிச் சென்று விடுகின்றனர்.  இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com