கூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும்: ஆட்சியர்

கூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
 தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் படி, சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,157 தொடக்கநிலை கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு நிலைகளில் நடைபெறவுள்ள தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
 சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 80 கூட்டுறவு சங்கங்களுக்கும், இயக்குநர் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களுக்கும், மீன் வளத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 5 கூட்டுறவு சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 4 கூட்டுறவு சங்கங்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களுக்கும், வேளாண்மை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 7 கூட்டுறவு சங்கங்களுக்கும், சமூக நலத்துறை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 1 கூட்டுறவு சங்கத்துக்கும், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 1 கூட்டுறவு சங்கத்துக்கும் என மொத்தம் 293 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்நிலை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 இத்தேர்தலை சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடித்து, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தும் அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com