மகளிர் தொழில்பூங்காவில் நேர்த்திமிகு மையம் திறப்பு

கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழில்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழில்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.ரோகிணி
 ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
 கருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிட்கோ மகளிர் தொழில்பூங்காவில் ரூ.1.12 கோடியில் நேர்த்திமிகு மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
 இதனைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.ரோகிணி ராம்தாஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியது:
 தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோரின் மேம்பாட்டுக்கும் முதல்வர் எண்ணற்ற திட்டங்களையும், வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்திட மேலும் புதிய தொழில்சாலைகளை உருவாக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
 புதிய தொழில் முனைவோர் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழகத்தில் 5 சிட்கோ மகளிர் தொழில்பூங்காக்களில் நேர்த்திமிகு மையங்களை திறக்கப்பட்டுள்ளன. கருப்பூரில் உள்ள சிட்கோ வளாகத்திலும் நேர்த்திமிகு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 சேலம் மாவட்டத்தில் ஏறத்தாழ 35 சதவீதம் பேர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 65 சதவீதத்தினர் சிறு, குறு, நடுத்தர தொழில் அல்லது தொழில்சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு தொழில்துறையில் ஈடுபட்டு வருவோருக்கு தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்திட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 சேலம் மாவட்டத்தில் புதிய "பஸ் போர்ட்' அமைக்கப்படவுள்ளது. மேலும் வரும் 25-ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவையும் தொடங்கப்படவுள்ளது. மேலும், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இவ்வாறு பலவித தொழில் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில்முனைவோர் இந்த நல்ல வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக புதிய தொழில் முனைவோர் மற்றும் பெண் தொழில்முனைவோர் தொழில் தொடங்க அதிகளவில் முன்வர வேண்டும்.
 இம்மகளிர் தொழில்பூங்காவில் உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களின் போட்டித் திறனை வளர்த்துக் கொள்வதற்கும், நவீன தொழில்நுட்பம், திறன் மற்றும் விற்பனை வசதிகளை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பொது காட்சியகம், விற்பனை மையம், பொது வியாபார மையம், பொது கூட்டரங்கம், வங்க சிற்றுண்டியகம் மற்றும் முதலுதவி மையம் போன்றவை அமைக்கப்படவுள்ளன.
 இளம் தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்குவதற்கு ஒற்றைசாளர முறை பின்பற்றப்படுகிறது. எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அரசின் சலுகைகளையும், உதவிகளையும் புதிய தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 இந்நிகழ்ச்சியில், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com