தர்ப்பூசணி கொள்முதல் விலை உயர்வு

சேலம் மாவட்டத்தில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால்,  வாழப்பாடி பகுதியில்,  முதல் முறையாக

சேலம் மாவட்டத்தில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால்,  வாழப்பாடி பகுதியில்,  முதல் முறையாக சோதனை முறையில் தர்ப்பூசணி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  
வாழப்பாடி பகுதியில் நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள், பாக்கு, தென்னை,  வாழை போன்ற நீண்ட கால பலன் தரும் மரப் பயிர்களையும், குறுகிய கால பணப்பயிரான நாட்டு ரக காய்கறிகள், பல்வேறு வகையான பூக்களையும், ஆண்டு முழுவதும் பயிர் செய்து வருகின்றனர்.
இந்தப்  பகுதியில் மூன்றாண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு பரவலாக மழை பெய்ததால்,  நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம் மூலம் நீர் கிடைத்தது. அதனால்,  கடந்தாண்டு அதிகளவில் நெல் பயிரிடப்பட்டது. பாசன வசதியில்லாத மானாவாரி நிலங்களிலும் கூட, கம்பு, சோளம், பருத்தி, மக்காச்சோளம், கேழ்வரகு,  துவரை, தட்டைப்பயிரு, உளுந்து, கொள்ளு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். 
வாழப்பாடி,  சேசன்சாவடி,  வேப்பிலைப்பட்டி,  திருமனூர் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் பாசன வசதி கொண்ட  விவசாயிகள், சோதனை முறையில் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் அறுவடை தொடங்கிய நேரத்தில்,  தர்ப்பூசணி கொள்முதல் விலை குறைவாக இருந்தது. ஒரு கிலோ ரூ. 5 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரையிலும் அளவு மற்றும் தரத்திற்கேற்ப விலை கிடைத்தது. 
அதனால் தர்ப்பூசணி பழங்களை நிலங்களில் இருந்து அறுவடை செய்யாமல், விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தர்ப்பூசணி கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ.13 வரையிலான விலையில் விற்கப்படுவதால்  வாழப்பாடி பகுதியில் சோதனை முறையில் தர்ப்பூசணி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஜெயராமன் கூறியதாவது:
வாழப்பாடியில் விவசாயிகள் சிலர்,  நிகழாண்டில் தர்ப்பூசணியை சோதனை முறையில் பயிரிட்டுள்ளனர். எனது நிலத்திலும் 40 செண்ட் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளேன். அறுவடை தொடங்கிய தருணத்தில் குறைந்திருந்த கொள்முதல் விலை, கடந்த சில தினங்களாக  உயர்ந்துள்ளது. 
 அதனால், அறுவடை செய்யாமல் நிலத்தில் நிறுத்தி வைத்திருந்த தர்ப்பூசணியை தற்போது அறுவடை செய்து,  வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, நேரடியாக நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்து வருகிறேன். எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காவிட்டாலும்,  இழப்பு ஏற்படாத அளவுக்கு விலை உயர்வு கைக் கொடுத்துள்ளதுஎன்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com