வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி தலைவெட்டி முனியப்பன் கோயிலுள்ள பழமையான மண் குதிரை சிலைகள். (வலது) மூலவரின் பாதம் காணப்படும் புனிதக் குழி.
வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி தலைவெட்டி முனியப்பன் கோயிலுள்ள பழமையான மண் குதிரை சிலைகள். (வலது) மூலவரின் பாதம் காணப்படும் புனிதக் குழி.

மூலவர் சிலை இல்லாத காரிப்பட்டி தலைவெட்டி முனியப்பன் கோயில்: குழிக்குள் இருக்கும் சுவாமி பாதத்துக்கு பூஜை செய்து வழிபடும் விநோதம் 

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில் மூலவர் சிலை இல்லாத தலைவெட்டி முனியப்பன் கோயிலில், குழிக்குள் இருக்கும் சுவாமியின் பாதத்துக்கு பூஜை செய்து வழிபடும் விநோதம், அப் பகுதி மக்களிடையே தொடர்ந்து வருகிறது.

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில் மூலவர் சிலை இல்லாத தலைவெட்டி முனியப்பன் கோயிலில், குழிக்குள் இருக்கும் சுவாமியின் பாதத்துக்கு பூஜை செய்து வழிபடும் விநோதம், அப் பகுதி மக்களிடையே தொடர்ந்து வருகிறது.
 சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், இன்றளவிலும் முன்னோர்களை வழிபடும் பல்வேறு நூதன வழிபாட்டு முறைகளை மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 அந்த வரிசையில், வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி கிராமத்தில் ஆற்றுப் பாலத்துக்கு அடியிலுள்ள புளியந்தோப்புக்குள் பழமையான தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது.
 இப் பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக் கோயிலுக்கு, கட்டடங்களோ, கோபுரங்களோ மட்டுமின்றி, மூலவரின் சிலை கூட இல்லை என்பதுதான் வியக்க வைக்கும் தகவலாகும்.
 மிகுந்த சக்தி கொண்டு விளங்கிய முனியப்பன், நூற்றாண்டுக்கு முன் அந்த கிராமத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அந்த குழந்தையை தனது சந்நிதிக்கு தூக்கிக் கொண்டு சென்று தாலாட்டியதாகவும், அக் குழந்தையை கிராம மக்கள் மீட்டு வீட்டுக்குக் கொண்டு சென்றதால், குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 இதனால், விரக்தியடைந்த அப் பகுதி மக்கள் திரண்டு சென்று முறுக்கு மீசை, மிரட்டும் கண்களுடன் கம்பீரமாக காட்சியளித்த மூலவரான முனியப்பன் சுவாமியின் தலையை வெட்டி, அப் பகுதியிலேயே குழிக்குள் புதைத்து விட்டனராம். அதனால் அக் கோயிலில் மூலவருக்கு உருவச் சிலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இருப்பினும், அக் குழியில் தெரியும் மூலவரின் பாதத்துக்கு அப் பகுதி மக்கள் இன்றளவும் பூஜை நடத்தி, வழிபட்டு வருகின்றனர்.
 அதுமட்டுமின்றி, நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்த சுவாமிக்கு நேர்த்திக்கடன் தீர்ப்பதற்காக பக்தர்கள் வடிவமைத்துள்ள மண் குதிரை சிலைகளையும் அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
 இக் கோயிலில் சுவாமிக்கு பலி கொடுத்த ஆட்டுக் கிடா, கோழிக் கறிகளை பெண்கள் உண்பதில்லையாம். விபூதியைக் கூட பெண்கள் பூசிக் கொள்வதில்லையாம்.
 இதுகுறித்து காரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி கூறியது: தலைவெட்டி முனியப்பன் கோயிலில் சுவாமிக்கு உருவச்சிலை ஏதும் இல்லை. கிராமத்திலுள்ள குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்ததால், முனியப்பன் சுவாமிதான் அதற்கு காரணமென கருதிய முன்னோர்கள், அச் சிலையின் தலையை வெட்டி தலைகீழாக புதைத்து விட்டனர். தற்போது குழிக்குள் தெரியும் சுவாமியின் பாதத்துக்கே பூஜை செய்து வழிபட்டு வருகிறோம். அக் கோயில் விபூதியை கூட வைத்துக் கொள்வதில்லை. கோயிலிலுள்ள மண் குதிரை சிலைகளை கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறோம் என்றார்.
 
  
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com