நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டு: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

நிபா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு பொது மருத்துவமனையில் தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர்

நிபா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு பொது மருத்துவமனையில் தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
நிபா வைரஸ் தொற்று பழந்திண்ணி வெளவால்கள் அதன் எச்சில், சிறுநீர், மலம் ஆகியவற்றால் மாசுபட்ட பழங்கள் பதநீர், காய்கறிகள் இவற்றை மனிதர்கள் சுவைப்பதால் பரவுகின்றது. பன்றிகளிலிருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவுகின்றது.
பாதிக்கப்பட்ட மனிதர்களை தொடுவதன் மூலமும், மனிதர்களின் உடல் திரவம் மூலமும் திசுக்கள் மூலமும், சுவாசம் மூலமும் ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவுகிறது.
நோய்க்கான அறிகுறிகள் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, வலிப்பு, சுயநினைவின்மை, நோய் தொற்று தென்படும் காலஅளவு 5 முதல் 14 நாள்கள் வரை ஆகும்.
நோய் தடுப்பு முறைகள் என்னவென்றால் முதலில் இந்த வைரஸ் காய்சலைக் கண்டு பீதி அடையத் தேவையில்லை. இதற்கு எந்த மருந்து மாத்திரைகளும் கிடையாது. ஆனால் நோய் வராமல் தடுக்க முடியும்.
வெளவால்களின் கழிவுகள் படிந்த மரங்களின் மீது ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். பறவைகள், விலங்குகள் கடித்த பழங்கள் உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். பதநீர் மற்றும் திறந்தவெளி கடைகளில் விற்கும் பழச்சாறுகளை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கழிப்பறை உபயோகித்த பின்னும், முன்னும் சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். கொதித்து ஆறிய நீரைக் குடிக்க வேண்டும். கடைகளில் திறந்த நிலையில் உள்ள தின்பண்டங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
பன்றிகளை வளர்ப்பவர்கள் அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வளர்க்க வேண்டும். பொதுமக்கள் பன்றிகளை தொடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரயாணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பயத்தினால் வெளவால்களை துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வனத் துறை ஆகிய துறைகள் மூலமாக காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும், 21 நடமாடும் மருத்துவக் குழு, 40 பள்ளி சுகாதார மருத்துவர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு பொது மருத்துவமனையை அணுக வேண்டும். இதற்கென சேலம் அரசு பொது மருத்துவமனையில் தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாய்வழி உப்புக் கரைசல் பாக்கெட்டுகள், ரத்த நாளம் மூலம் செலுத்தும் உயிர் திரவம் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கனகராஜ், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மருத்துவர் சண்முகம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் க.பூங்கொடி, சேலம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க பிரதிநிதி மருத்துவர் முத்துக்குமார் உட்பட தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com